சிறப்புக் கட்டுரைகள்

கருப்பை இறங்குவதால் இளம்பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
- அதிக உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உடல் பகுதிக்குள் உள்ள உறுப்புகளில் அழுத்தம் அதிகமாகும்.
- மலச்சிக்கல், இருமல், சளி ஆகியவை இருந்தால் அதை சரி செய்ய வேண்டும்.
பெண்களை பாதிக்கின்ற கர்ப்பப்பை குடலிறக்கம் பற்றி பார்த்து வருகிறோம். இது வயதான பெண்களை மட்டுமல்ல, வயது குறைந்த பெண்களையும் பாதிக்கும். ஆனால் வயதானவர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இடுப்புத்தள தசை தளர்வு அடைவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்த இடுப்புத்தள தசை தளர்வுகளால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்று பார்த்தால், சில பெண்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுதொடர்பாக சிகிச்சைக்கு வரும் பெண்கள், 'டாக்டர் எங்களுக்கு கணவன், மனைவி உறவில் திருப்தி இல்லை. பாலியல் உறவின்போது எனது கணவர் திருப்தி இல்லை என்கிறார்' என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைகளுடன் சிகிச்சைக்கு வருகின்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முதல் பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்:
குறிப்பாக பல பெண்களுக்கு முதல் பிரசவத்தின்போது சிசேரியன் இல்லாமல் இயல்பாக குழந்தை பிறக்கும் நிலையில் அவர்களது யோனி குழாய் விரிவாகி தளர்வு அடைகிறது. யோனி குழாய் தளர்வு அடைவதற்கு பிரசவம் என்பது காரணம் இல்லை. அதற்கு முக்கியமான காரணமே இடுப்பின் அடிப்பகுதியான இடுப்புத்தள தசை தளர்வு அடைவது தான். இது பிரசவம் ஆன பெண்கள் பலரும் எதிர்நோக்கும் சில பிரச்சனைகள் ஆகும்.
இது தவிர பல நேரங்களில் அவர்களுக்கு மோஷன் கட்டுப்படுத்தும் தன்மை இருக்காது. அதாவது அவர்களுக்கு மோஷன் போனாலும் அதை அறியும் உணர்வு இருக்காது. இந்த பிரச்ச னையானது மலக்குடல் இறக்கம் அடைந்திருப்பதால் வரலாம். அந்த வகையில் இடுப்புத்தள தசையானது, சிறுநீர் கசிவு பிரச்சனை, மோஷன் கட்டுப்பாடு பிரச்சனை, பாலியல் உறவு பிரச்சனை ஆகியவற்றில் முக்கியமான பங்கை வகிக்கிறது.
பெண்களுக்கு வயதானால் இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது இளம் வயது பெண்களுக்கும் வருகிறது. குறிப்பாக திருமணமாகாத பெண்களில் கூட 2 சதவீதம் பேருக்கு இந்த இடுப்புத்தள தளர்வு பிரச்சனை ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். இளம்பெண்களுக்கும் இது ஏற்படுவது தான் ரொம்ப ஆச்சரியமான விஷயம்.
இதுதொடர்பாக நடந்த ஒரு ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த விஷயம், பிறக்கும்போதே சில பெண்களுக்கு இடுப்புத்தள தசை பகுதிகளில் தளர்வு ஏற்படுவதற்கான தன்மைகள் காணப்படும். அதாவது இந்த பகுதியில் உள்ள தசைநார்கள், தசைகள் ஆகியவற்றின் தளர்வு, இணைப்பு திசுக்களின் தளர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும். இதை எக்லர்ஸ் டன்லாஸ் சின்ட்ரோம் என்று சொல்கிறோம்.
இந்த சின்ட்ரோமில் பொதுவாகவே எல்லாவிதமான உறுப்புக்களை இணைக்கின்ற திசுக்கள் அனைத்தும் தளர்வாகி, அவர்களுக்கு இயற்கையாகவே இந்த மாதிரியான பாதிப்புகள் வருவதற்கான தன்மைகள் இருக்கும். இது பிறக்கும்போதே அவர்களின் இணைப்பு திசுக்களில் ஏற்படுகின்ற தளர்வாகும். இந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் பெண்கள் கிட்டத்தட்ட 0.2 முதல் 0.6 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிறக்கும்போதே, அதாவது பிறந்து சிறு வயதிலேயே இந்த மாதிரியான தளர்வுகள் ஏற்படும். அவர்களுக்கு 16, 17 வயதாகும்போது கர்ப்பப்பை இறங்கிவிடும்.
கர்ப்பப்பை அடியிறக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்:
எனது அனுபவத்தில் இளம் வயதில் கர்ப்பப்பை குடலிறக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் 6 பேரை பார்த்து இருக்கிறேன். அவர்கள் சிகிச்சைக்கு வரும்போது கர்ப்பப்பை கீழே இறங்கி இருப்பதுபோல் தெரிகிறது என்று சொல்வார்கள். அதாவது கர்ப்பப்பை அடி இறக்கமாகி இருக்கிறது என்பார்கள். இது இயற்கையாகவே அவர்களுடைய உடல் ரீதியான தளர்வுகளால் வரலாம். ஆனால் இவை தவிர மேலும் சில விஷயங்களாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
என்னென்ன காரணங்களால் இவை வரலாம் என்று பார்த்தால், அதிக உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உடல் பகுதிக்குள் உள்ள உறுப்புகளில் அழுத்தம் அதிகமாகும். உடல் பருமன் அதிகரிப்பதால் ஏற்படும் இந்த அழுத்தம் காரணமாக பொதுவாக அவர்களுக்கு இடுப்புத்தள தசை இறக்கம் ஏற்படலாம்.
மேலும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அவர்களது வயிற்றில் இருக்கின்ற கொழுப்பினாலும் உடலின் உள்புறம் அழுத்தம் அதிகமாகி அதனால் இடுப்புத்தள தசை தளர்வாகலாம். எந்த ஒரு உடலுக்கும் தாங்குகின்ற சக்தி என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருக்கும். அதையும் தாண்டினால் தான் இந்த பிரச்சனை ஏற்படும்.
இதுதவிர சில பெண்களுக்கு நீண்ட காலமாக மலச்சிக்கல் இருக்கலாம். இந்த மலச்சிக்கல் காரணமாக தினமும் மோஷன் போவதற்காக, அளவுக்கு மீறி அழுத்தம் கொடுக்கும்போது, தசைகள் தளர்வு அடைந்து அதன் காரணமாக இடுப்புத்தள தசையும் தளர்வாகலாம். அதாவது தசைகளுக்கு அழுத்தம் கொடுக்க கொடுக்க அந்த தசை பகுதியே தளர்வாகிவிடும்.
இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பு:
இன்னும் சில பெண்களுக்கு கடுமையான இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு ஆகியவற்றால் உடல் உள் உறுப்புகளில் அழுத்தம் அதிகமாகும். இவை எல்லாமே இடுப்புத்தள தசை தளர்வு அடைவதற்கு முக்கியமான காரணங்களாக கருதப்படுகிறது. இளம்பெண்களில் ஒன்று முதல் 2 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சனைகள் வரும்.
திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன நிலையில் இந்த பெண்கள் குழந்தையின்மை சிகிச்சைக்கு வருவார்கள். ஆனால் அவர்கள் முதல் பிரச்சனையாக குழந்தையின்மை பற்றி சொல்ல மாட்டார்கள். டாக்டர் எனக்கு முதல் பிரச்சனை சிறுநீர் கட்டுப்பாட்டில் இல்லை. பாலியல் உறவில் ஈடுபடும்போது கூட சிறுநீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவே ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்பார்கள்.
சிரிக்கும் போதும் சிறுநீர் வருகிறது. ஜீன்ஸ் உடை அணிந்திருக்கும் நேரங்களில் கழிப்பறை செல்வதற்கு முன்பு சிறுநீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சொல்வார்கள். இந்த மாதிரியான பிரச்சனைகள் இடுப்புத்தள தசை தளர்வுகளால் தான் ஏற்படுகிறது. இளம் வயது பெண்களுக்கு இந்த மாதிரி வந்தால் அவர்க ளுக்கு சிறுநீர் கசிவு அறிகுறிகள் இருக்கும். அப்போது அவர்களை பரிசோதித்து பார்த்தால் சிலருக்கு கர்ப்பப்பையின் இறக்கம் அதிகமாகி கர்ப்பவாய் வெளிப்பக்கமாக தெரியும்.
சில பெண்களுக்கு கர்ப்பவாயின் நீளம் அதிகரித்து காணப்படும். வழக்கமாக இது 3 செ.மீ நீளம் இருக்க வேண்டும். ஆனால் இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு 8 செ.மீ. முதல் 9 செ.மீ. ஆக அதிகரித்து வெளிப்பக்கம் கூட தெரியும். பல நேரங்களில் கர்ப்பப்பையே லேசாக இறங்கி இருக்கும். இதனோடு சேர்ந்து இவர்களுக்கு இடுப்புத்தள தசை தளர்வு காரணமாக சிறுநீர்ப்பையும் இறங்கி விடும். பல நேரங்களில் மலக்குடலும் இறக்கமாக இருக்கும்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
பருமனாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும்:
இது போன்ற பாதிப்பு கொண்ட பெண்களுக்கு நல்ல சிகிச்சை முறைகள் இருக்கிறது. இவர்களுக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை முறை நல்ல பலனை அளிக்கும். லேப்ராஸ்கோபி மூலமாக சஸ்பென்ஷன் அறுவை சிகிச்சை எனப்படும் எளிமையான சிகிச்சை முறையில் கீழே இறங்கியுள்ள கர்ப்பப்பை மேலே தூக்கி நிறுத்தப்படுகிறது.
மீண்டும் அது கீழே இறங்காமல் இருக்க அதனை தாங்கி பிடிக்கும் திசுகளுக்கு வலுவை கொடுப்பதற்கு, சில சப்போர்ட் அமைப்பும் ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இந்த பெண்களுக்கு இந்த கருப்பை அடியிறக்கம் சரியாகிறது. சிறுநீர் கட்டுப்பாடின்மை பாதிப்பும் குறைவாகிறது. பிறக்கும் போதே வரும் பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு இந்த சிகிச்சையை அளிக்கலாம்.
இளம் வயது பெண்களுக்கு இந்த கருப்பை இறக்கம் ஏற்படும் நிலையில், உடல் பருமனாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். மலச்சிக்கல், இருமல், சளி ஆகியவை இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். பல நேரங்களில் இந்த கருப்பை இறக்கம் இருந்தால் லேப்ராஸ்கோபி மூலமாக சிகிச்சை அளிக்கும்போது பிற்காலத்தில் குழந்தையின்மை மற்றும் பாலியல் பிரச்சனைகள் வருவதையும் தடுக்க முடியும்.
உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு நான் சொல்கிற முக்கியமான விஷயம், இடுப்புத்தள தசையை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும். இந்த பயிற்சிகளை முறையாக செய்தால் கண்டிப்பாக உடல் பருமன் குறையும் போது இடுப்புத்தள தசை தளர்வும் குறைவாகும். இருமும் போதும், தும்மும் போதும், சிரிக்கும்போதும் ஏற்படும் சிறுநீர் கசிவு குறைவாகும். அவர்களுடைய கருப்பை இறக்கம் அடைவதும் தடுக்கப்படும்.
இதற்கான உடற்பயிற்சிகளை பிசியோதெரபி நிபுணர்களிடம் கேட்டு முறைப்படி செய்யும்போது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஏனென்றால் இப்போது நீங்கள் தடுக்கவில்லை என்றால், பிற்காலத்தில் கர்ப்பப்பை முழுவதும் இறங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் சிறுநீர்ப்பை முழுவதும் இறங்கலாம். இதனால் சிறுநீர் கட்டுப்பாடு, சிறுநீர் கசிவு அதிகமாகி உங்களுடைய வாழ்க்கைத்தரம் மோசமாகி வாழ்நாள் முழுவதும் பிரச்சனைகள் ஏற்படும்.
இளம் வயது பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டால் இதற்கான சிகிச்சை என்பது மிகவும் எளிமையான முறையாகும். இதற்கு பயிற்சி மட்டும் அல்ல, சில நவீன சிகிச்சை முறைகளும் இருக்கிறது.
கருப்பை குடலிறக்கத்துக்கு முக்கிய காரணமான இடுப்புத்தள தசை தளர்வு ஏற்படுவதை தடுப்பதற்கு, இளம் வயது பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும்? பிரசவத்தின் போது எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.