சிறப்புக் கட்டுரைகள்

ஆபத்தில்லா சிறுதீனி
- சாக்லேட் என்ற பெயரில் வருபவற்றில் இருபது கிராம் சர்க்கரையில் நூறுகிராம் சர்க்கரைக்குரிய அடர் இனிப்புத் திணிக்கப்பட்டிருக்கும்.
- குடல்வால் என்பது சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் தனியாக நம்முடைய ஆட்காட்டி விரல் அளவிற்கு நீண்டிருக்கும் ஓரமைப்பு.
மக்காச்சாளம் பொரித்தல் பற்றிப் போன வாரம் பார்த்தோம். நம்முடைய தானியங்களையும் பொரித்து உண்பது காலங்காலமாக உள்ளதுதான். அரிசிப்பொரி நம்முடைய கோவில் திருவிழாக்களில் தவிர்க்க முடியாத பண்டம். இந்திய இந்துக்கள் சடங்குளில் கடவுளுக்குப் படைக்கப்படுவது பொரி. அரிசியை நேரடியாக வாணலியில் மட்பாண்டத்தில் இட்டுப் பொறித்தால் கட்டெறும்பு அளவிற்குப் பொறிந்து வரும். அது மெள்ளுவதற்குச் சற்றே கடினமாக இருக்கும். நாவில் ஒட்டும் விதமாகப் பசைத் தன்மையோடு இருக்கும். ஆனால் பரவலாக அறியப்பட்ட அரிசிப் பொரி வாயிலிட்டு மெள்ளுவதற்கு முன்பே கரைந்து ஓடிவிடும். அரிசியை உப்பிட்டு குறிப்பிட்ட பதத்தில் ஊற விட்டுக் காயவைத்து பின்னர் நிதானமாகச் சூடேறும் வகையில் மணலில் இட்டு வறுப்பார்கள். இப்பொழுது அரிசி, தன்னைப் போலப் பத்து மடங்கிற்கு உப்பி வரும். எச்சில் ஈரம் பட்டதும் அப்படியே கரைந்து இறங்கும்.
ஒவ்வொரு வேளையும் உடலின் பராமரிப்புக்கும், உழைப்பின் சக்திக்கு ஊக்கமளிக்கும் சத்தான உணவு உண்பது அனைத்து நாடுகளிலும் உள்ளதுதான். அதுபோலவே இடைத் தீனி என்பதும் உலகெங்கும் இருப்பது தான். இதனைச் சிறுதீனியென்றும் கூறுவர். அதாவது அதிக சத்துக்கள் தருவதில்லை என்றாலும் ஆயாசத்தை, மனச் சோர்வை போக்கும் விதமாக குறைவான சத்துக்களையும், நாவினை வருடிச் செல்லும் தன்மையுடன் மூளைக்குத் தூண்டல் தருவதாகவும் இருக்கும்.
இடைத்தீனி என்பது தவறான பழக்கம் என்பது போன்ற கருத்து நம்மிடையே நிலவுகிறது. அதாவது உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்கள், ஒவ்வொரு வேளை உணவையும் நாலாவிதமான சத்துக்களுடன் பொருக்க உண்டு விட்டு திணறுகிறவர்கள், உடலில் ஏற்கனவே பலவிதமான நோய்களை உருவாக்கி வைத்திருப்பவர்கள் இத்தகைய இடைத்தீனிகளைத் தவிர்த்தே ஆக வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சிலருக்கு இடைத்தீனி, இடைப்பானம் இல்லாமல் ஒருவேளையும் ஓடாது. மனமே நிலைகுத்தி ஸ்தம்பித்து விடும். சிலருக்கு நேர நேரத்திற்கு காபி, டீ குடிக்காவிட்டால் தலைவலி, கைகால் நடுக்கம் போன்றவை ஏற்பட்டு விடும்.
இப்படியான பழக்கத்திற்கு ஆட்பட்டோர் அதிலிருந்து மீண்டு வருவதே சரி. குறிப்பிட்ட நேரத்தில் அணில் போல எலி போல எதையாவது கொறித்தாக வேண்டும் என்ற பழக்கத்திற்கு அடிமைப்பட்டு உடலைப் பெருக்க வைத்து அதனைத் தூக்கிச் சுமப்பதே மகத்தான வேலையாகக் கருதுவோர் அப்பழக்கத்தைக் கஷ்ட்டப்பட்டு, அது தம் ஆரோக்கியத்திற்கு எதிரானது என்ற கருத்தைக் கவனத்தில் கொண்டு இஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டே ஆகவேண்டும். அணில், எலி போன்ற சிற்றுயிர்களின் பற்கள் எதையாவது கொறிக்கவில்லை என்றால் அதன் கூர்மை மழுங்கி விடும் அதற்காகக் கொறிப்பதற்கு கொட்டைகள், மணிலாக் கொட்டை, உமியுடன் கூடிய தானியங்கள் போன்றவை கிடைக்கா விட்டால் நம் வீட்டுக் கதவையும் கூட எலிகள் கடித்துக் கொறித்து விடும். கதவைக் கொறிக்க முடியாத அளவிற்கு உறுதி மிக்க பலகையைக் கொண்டு பொருத்தி இருந்தால் நமது குளியலறைச் சோப்பையாவது கடித்து பழிதீர்த்துக் கொள்ளும். நம் கதைக்கு வருவோம்.
சதாசர்வ காலமும் எதையாவது கொறித்துக் கொண்டே இருப்பவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து மீளவில்லை என்றால் உடலே அவர்களைப் படுக்க வைத்துத் தன்னை மீட்டுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர். திடீர் மூச்சிரைப்பு, உடல் வியர்த்தல், மயக்க நிலைக்குப் போதல், உடல் மிக வேகமாக இளைத்தல், நிற்காமல் வயிற்றுப் போக்குப் போதல் போன்ற ஏதேனும் ஒரு உபாதை ஏற்பட்டு இனம் புரியாத பயத்திற்கு ஆளாகி மருத்துவமனைக்குப் போகநேரிடும். அப்படிப் போனால் அட்மிசன் போடனும், அப்சர்வ் பண்ணனும், ஐசியுவில் வைக்கணும், ஏதொண்ணும் சொல்ல டைம் வேணும் என்று மருத்துவர்கள் கூறி விடுவார்கள். அதற்குப் பின்னர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். தொடர் பிரச்சனைகள் குறித்து இங்கே நாம் சொல்ல வேண்டியதே இல்லை.
மற்றபடி உடலைக் கட்டுக்குள் வைத்திருப் போர், தமது இயல்பான இயக்கத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாதவர்கள் தேவைப்படுகிற பொழுது சிறுதீனி எடுத்துக் கொள்ளுவதில் தவறேதும் இல்லை.
இன்று அலுவலகத்தில் உழைக்கும் பெண்கள், தொடர்ந்து நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலைசெய்யும் பெண்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும்படியான ஆண்களும் கூட இடைத்தீனியாக சாக்லேட் பார், க்ரீம் பிஸ்கட் போன்றவற்றை எடுத்துக் கொறிக்கிறார்கள். இந்த பண்டங்கள் அனைத்தும் செறிவூட்டப்பட்டவை. சத்துக்களால் அல்ல, சுவையாலும், நிறத்தாலும் செறிவூட்டப்பட்டவை. ஒரு சாக்லேட் பாரில் ஐந்து மடங்கு இனிப்பு செறிவூட்டப்பட்டுள்ளது. அதாவது இயல்பாக முப்பது கிராம் அளவுள்ள ஒரு பண்டத்தை எடுத்துக் கொண்டால் அதில் இருபது கிராம் இனிப்பு இருப்பது சரியான அளவாக இருக்கும். மீதி பத்து கிராமிற்குள் மாவு, டால்டா, பால், நிறமூட்டி, சுவையூட்டி போன்ற பல பொருட்கள் கலந்து இருக்கலாம்.
ஆனால் இங்கே சாக்லேட் என்ற பெயரில் வருபவற்றில் இருபது கிராம் சர்க்கரையில் நூறுகிராம் சர்க்கரைக்குரிய அடர் இனிப்புத் திணிக்கப்பட்டிருக்கும். அதுவும் சர்க்கரை அல்ல. இரசாயன அதாவது சாக்ரீன் எனும் பெட்ரோலியத்தின் உபக் கூறுகள். இந்த மிகை இனிப்பை நமது உடலுள்ளுறுப்புகளால் கையாள முடியாது. குறிப்பாக கல்லீரலும், மண்ணீரலும், சிறுநீரகமும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகும். அதில் உள்ள நிறமி நுரையீரலிலைப் பாதிக்கும். டால்டா அதாவது தாவரக் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பதாக சாக்லேட் பாரின் மேலட்டையில் குறிக்கப்பட்டிருக்கும். உண்மையில் அது டால்டா அல்ல. மெழுகே ஆகும். இந்த மெழுகு ரத்தத்தில் கலக்கிற பொழுது ரத்தவோட்டம் மந்தப்படும். எனவே அயர்ச்சியும், மந்தமும், அதீத வியர்வை சுரப்பும் உடலில் ஏற்படும்.
போப்பு, 96293 45938
இம்மெழுகும் பெட்ரோலியத்தின் உபக்கூறே ஆகும். இவற்றை நம்முடலின் உள்ளுறுப்புகளால் அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாது. எனவே அவற்றை வெளியேற்ற பெருமுயற்சி மேற்கொள்ளும். ஆனால் முழுமையாக வெளியேற்றி முடிக்கும் முன்னர் அடுத்த சாக்லேட் பாரை நாம் உண்ணத் தொடங்கினால் பழைய கழிவுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு புதிதாக வந்த சாக்லேட்டை செரித்து தேவையில்லாத நச்சுக்கழிவுப் பொருட்களை வெளியேற்ற வேண்டிய கடமை உடலுறுப்புகள் மீது ஏற்றப்படும்.
சாக்லேட் பார்களைத் தொடர்ந்து எடுக்கும் நபர்களுக்கு மலச்சிக்கல் அடிவயிற்றுக் கொழுப்புத் திரட்சி போன்ற ஒரே மாதிரியான கூறுகளை நாம் அவதானிக்க முடியும். இளவயதில் உருவாகும் மலச்சிக்கல் மிகவிரைவிலேயே குதம் வெளித்தள்ளப்படும் மூலச் சிக்கல், ஆசன வாய் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
பசியெடுக்கும்போது நீ, நீயா இருக்க மாட்ட. இந்தாப் பிடி என்று கொடுக்கப்படும் சாக்லேட் பத்துத் தின்றால் போதும் அதைத் தின்றவன் உருப்படியா இருக்கமாட்டான். அவனது செரிமான மண்டலம், பெருங்குடல், ஆசனவாய் அத்தனையும் பிசுபிசுப்பேறி, நச்சுத் தன்மைப் படர ஆரம்பித்து விடும். சிலருக்குக் குடல்வால் பிரச்சனை ஏற்படும். உயிர்போகும் வலி தோன்றி விடும்.
குடல்வால் என்பது சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் தனியாக நம்முடைய ஆட்காட்டி விரல் அளவிற்கு நீண்டிருக்கும் ஓரமைப்பு. இது மிகுதியான கழிவுப் பொருட்களை உள்ளீர்த்து வைத்து அவற்றை ரசாயன மாற்றத்திற்கு உள்ளாக்கி வேறுவடிவத்திற்கு மாற்றி வெளியேற்றும் பழம்பொருட்கடையாகும். அதில் வழியேற்படுமானால் உடனடியாக உண்பதை நிறுத்தி விட வேண்டும். செரிமான மண்டலத்திற்குக் கொடுக்கப்படும் வேலை நிறுத்தப்பட்டால் அப்பெண்டிஸ் எனும் குடல்வால் தன்னுள்ளே தேக்கி வைத்த இரசாயனக் கழிவை நீர்க்கச் செய்து பீய்ச்சி அடித்து வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தி விடும். ஆனால் அடிவயிற்றுப் பகுதியில் வலிக்கிறது என்று மருத்துவரைப் பார்த்தால் குடல்வால் வீங்கி இருக்கிறதென்று அதனை அகற்ற வேண்டும் என்பார்.
வலிக்குப் பயந்து நீக்கி விட்டால் பின்னர் அந்த வலி தோன்றாமல் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தத்தில் செரிமானத் திறன் குன்றி விடும். குடல்வால் நீக்கத்திற்கு உள்ளானவர்கள் ஒன்று சாப்பிட முடியாமல் மெலிந்து போவார்கள். அல்லது கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு, உடல் உப்பி பெரும் மந்தத்தன்மைக்கு உள்ளாவார்கள்.
மேற்சொன்ன அரிசிப் பொரியை உண்பவர்களுக்கு சாக்லேட் பார் தொடர்ந்து உண்ணும்போது ஏற்படும் குடல்வால் பிரச்சனை, மலச் சிக்கல் பிரச்சனை ஏற்படாதது மட்டுமல்ல செரிமானமும் எளிதாக இருக்கும்.
தொடர்ந்து ஆபத்தில்லாத சிறுதீனி சுவைப்போம்.