என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    நினைத்ததை நடத்தும் திருச்செந்தூர் முருகன் - முருகனை புகழ்ந்து உதடு ஒட்டாமல் பாடல்!
    X

    நினைத்ததை நடத்தும் திருச்செந்தூர் முருகன் - முருகனை புகழ்ந்து உதடு ஒட்டாமல் பாடல்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவப்பிரகாசர் எந்த அளவுக்கு தமிழ் மீது புலமை பெற்றிருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள விரும்பினார்.
    • இருவரும் உதடு ஒட்டாமல் பாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சீபுரத்தில் குமாரசுவாமி தேசிகர் என்பவர் வசித்து வந்தார். சிவன் மீதும், முருகன் மீதும் இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் அளவில்லாத பக்தியும், பற்றும் இருந்தது. இதனால் குமாரசுவாமி தேசிகருக்கு பிறந்த குழந்தைகளும் ஆன்மீக பாதையில் தங்களை ஈடுபடுத்தி இருந்தனர்.

    குமாரசுவாமி தேசிகருக்கு மொத்தம் 4 மகன்கள் பிறந்தனர். அவர்களில் முதல் மகன் சிவப்பிரகாசர். இவர் தமிழ் இலக்கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் மிகுந்த புலமைப் பெற்று திகழ்ந்தார். இதன் காரணமாக இளம் வயதிலேயே பக்தி பாடல்கள் பாடுவதில் வல்லவராக இருந்தார்.

    கல்வியில் ஓரளவு புலமை பெற்று இருந்தாலும் அவருக்கு தமிழில் உள்ள அனைத்து வகையான இலக்கண நுட்பங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த ஆசை ஏற்பட்டது. தமிழகத்தில் எங்கு சென்றால் இலக்கண நுட்பங்களை கற்றுக்கொள்ள முடியும் என்று ஆய்வு செய்தார்.

    அப்போது அவருக்கு திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்வேறு இந்து சமய மடங்கள் தமிழ் இலக்கண அடிப்படையில் இறைவன் மீது பாடல் இயற்ற பயிற்சிகள் அளிப்பது தெரிய வந்தது. குறிப்பாக நெல்லை சிந்துபூந்துறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான மடம் இத்தகைய பயிற்சியை சிறப்பாக அளிப்பது அவரது கவனத்தை ஈர்த்தது.

    எனவே பெற்றோரிடம் ஆசி பெற்று விட்டு தமிழ் இலக்கணத்தை மேலும் கற்றுக் கொள்வதற்காக அவர் திருநெல்வேலிக்கு புறப்பட்டு வந்தார். அப்போது நெல்லை தருமபுரம் ஆதீனத்தின் அதிபராக வெள்ளியம்பலவாண சுவாமிகள் இருந்தார்.

    இவர் முத்தமிழிலும் தேர்ச்சிப் பெற்றவர். இயல், இசை, நாடகம் தொடர்பாக தமிழில் அவர் பெற்ற மேன்மை அவரோடு இருந்தவர் களையும் மேன்மை பெற செய்தது. இதை சிவப்பிரகாசர் ஏற்கனவே அறிந்து இருந்தார்.

    தருமபுரம் ஆதீனத்துக்குள் நுழைந்ததும் அவர் வெள்ளியம்பலவாண சுவாமிகள் காலில் விழுந்து வணங்கினார். தமிழ் இலக்கணத்தில் நுட்பங்களை தெரிந்துக் கொள்வதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து வந்திருக்கும் தகவலை கூறினார். அதை கேட்டதும் வெள்ளியம்பலவாண சுவாமிகளுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

    சிவப்பிரகாசர் எந்த அளவுக்கு தமிழ் மீது புலமை பெற்றிருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள விரும்பினார். அதற்காக அவர் ஒரு சோதனையையும் நடத்தினார். அந்த சோதனை மிக மிக வித்தியாசமானது.

    முதலிலும் "கு", முடிவிலும் "கு", இடையில் ஊருடையான் என்ற வகையில் அமையும்படி அருமையான ஒரு வெண்பா பாடு பார்க்கலாம் என்று வெள்ளியம்பலவாண சுவாமிகள் அதிரடியாக சிவப்பிரகாசருக்கு உத்தரவிட்டார். இதை கேட்டதும் சிவப்பிரகாசர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த நிமிடமே அவர் ஒரு வெண்பாவை பாடினார்.

    குடக்கோடு வானெயிறு

    கொண்டார்க்குக் கேழல்

    முடக்கோடு முன்னமணி வார்க்கு -

    வடக்கோடு தேருடையான் தெவ்வுக்குத்

    தில்லைத்தோல் மேற்கொள்ளல்

    ஊருடையான் என்னு முலகு- என்று சிவப்பிரகாசர் பாடினார்.

    இந்தப் பாடலை கேட்டதும் வெள்ளியம்பல வாண சுவாமிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிவப்பிரகாசர் உண்மையிலேயே தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழில் அவருக்கு ஆழ்ந்த புலமையும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார். அவருக்கு இலக்கண நுட்பங்களை சொல்லிக் கொடுக்க சம்மதித்தார்.

    அதன்படி தமிழில் உள்ள ஐந்து இலக்கண நுட்பங்கள் அனைத்தையும் சிவப்பிரகாசருக்கு வெள்ளியம்பலவாண சுவாமிகள் ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார். பல மாதங்கள் வெள்ளியம்பலவாண சுவாமிகள் பாதங்களை தொழுது சிவப்பிரகாசர் தமிழ் இலக்கணத்தில் முழுமையாக மேன்மை பெற்றார்.

    நெல்லையில் தங்கியிருந்த நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவதை சிவப்பிரகாசர் வழக்கத்தில் வைத்திருந்தார். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு தருமபுரம் ஆதீன மடத்தில் பெற்று வந்த பயிற்சிகள் நிறைவு பெற்றன.

    இதனால் அந்த மடத்தில் இருந்து விடைபெற சிவப்பிரகாசர் தீர்மானித்தார். அதற்கு முன்னதாக தனது குரு வெள்ளியம்பலவாண சுவாமிகளுக்கு உரிய தட்சணை கொடுத்து கவுரவிக்க முன்வந்தார்.

    ஆனால் சிவப்பிரகாசரிடம் எந்த தட்சணையோ, அன்பளிப்பையோ வெள்ளியம் பலவாண சுவாமிகள் எதிர்பார்க்க வில்லை. என்றாலும் அவர் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன் வைத்தார்.

    வெள்ளியம்பலவாண சுவாமிகளுக்கு எந்த அளவுக்கு ஆதரவாளர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு பொறாமை பிடித்த எதிர்ப்பாளர்களும் இருந்தனர். வெள்ளியம்பலவாண சுவாமிகளை எப்போதும் மட்டம் தட்டுவதையே அவர்கள் வழக்கத்தில் வைத்திருந்தனர்.

    அந்த வகையில் திருச்செந்தூர் ஆலயத்தில் இருந்த ஒரு புலவர் வேண்டும் என்றே வெள்ளியம்பலவாண சுவாமிகளை தரக்குறைவாக பேசிக் கொண்டே இருந்தார். இதுபற்றி அறிந்ததும் வெள்ளியம்பலவாண சுவாமிகள் மிகவும் வருத்தம் அடைந்தார்.

    அந்த திருச்செந்தூர் புலவருக்கு தமிழ் இலக்கணம் வாயிலாக தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார். அந்த பதிலடி கொடுக்கக் கூடிய சரியான நபர் சிவப்பிரகாசர்தான் என்று நினைத்தார்.

    எனவே அவர் சிவப்பிரகாசரிடம் திருச்செந்தூர் புலவர் பற்றி சொல்லி அவரை திருத்துமாறு கேட்டுக் கொண்டார். இதுதான் குருவுக்கு தரும் உண்மையான தட்சணை என்றும் அறிவுறுத்தினார்.

    குருவின் இந்த வேண்டுகோளை சிவப்பிரகாசர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அன்றே அவர் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். திருச்செந்தூர் ஆலயத்தில் முருகனை வழிபட்டு விட்டு பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆணவம் பிடித்த அந்த திருச்செந்தூர் புலவர் அந்த பிரகாரத்தில் உட்கார்ந்து இருந்தார். அவர் சிவப்பிரகாசரை பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு சிவப்பிரகாசர், "நான் வெள்ளியம்பலவாண சுவாமிகளின் கால் தூசியில் இருப்பவன்" என்று பதில் அளித்தார். இதை கேட்டதும் அந்த ஆணவம் பிடித்த திருச்செந்தூர் புலவருக்கு கோபம் வந்தது.

    அவர் சிவப்பிரகாசரை பார்த்து, "அந்த வெள்ளியம்பலவாண சுவாமிகளே ஒரு தூசிதான். நீ எம்மாத்திரம்?" என்று கிண்டலாக பேசினார். அதற்கு சிவப்பிரகாசர், "உங்களால் நேர்மையாக பாடல் இயற்றி வெற்றி பெற முடியுமா?" என்று சவால் விட்டார். இதைக் கேட்டதும் திருச்செந்தூர் புலவருக்கு கோபம் வந்தது.

    "என்னோடு போட்டி போட வருகிறாயா?" என்று சவால் விட்டார். அந்த சவாலை சிவப்பிரகாசர் ஏற்றுக் கொண்டார். இருவரும் உதடு ஒட்டாமல் பாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதாவது யார் ஒருவர் முதலில் நிரோட்டக யமக அந்தாதி ஒன்றை முதலில் பாடுகிறாரோ அவரே போட்டியில் வென்றவர் என்று முடிவு செய்யப்பட்டது.

    "நிரோட்டக யமக அந்தாதி" என்றால் என்ன தெரியுமா? தமிழில் உள்ள பல சிறப்புக்களில் நிரோட்டக யமக அந்தாதி வகை பாடல்களும் ஒன்றாகும். நிரோட்டகம் என்றால் நிர் + ஒட்டகம் என்று பிரித்து பொருள் அறிய வேண்டும். அதாவது நிரோட்டகம் என்றால் உதடு ஒட்டாமல் இருப்பது என்று அர்த்தமாகும்.

    உதடு ஒட்டாத எழுத்துக்கள் கொண்ட சொற்களை பொருள் வருமாறு இணைத்துப் பாடுவது நிரோட்டகச் செய்யுள் ஆகும்.

    திருக்குறளில் பல குறட்பாக்கள் நிரோட்டகமாக உள்ளன. நிரோட்டகச் செய்யுளுடன் யமக வடிவைச் சேர்ப்பது நிரோட்டக யமகம் ஆகும். யமகம் என்றால் செய்யுளின் ஒவ்வொரு அடியிலும் முதல் சில எழுத்துக்கள் அல்லது சொற்றொடர் திருப்பித் திருப்பி வரவேண்டும், ஆனால் வெவ்வேறு பொருளில் வர வேண்டும். இப்படி வந்தால் யமகம் ஆகும்.

    அந்தாதி என்றால் ஒரு செய்யுளின் இறுதி அடியில் வரும் இறுதிச் சொல்லோ அல்லது எழுத்தோ அடுத்த செய்யுளின் முதல் அடியின் முதல் சொல்லாக அமைந்து பாடல்களைத் தொடுக்க வேண்டும்.

    இப்படி நிரோட்டகமாகவும் யமகமாகவும் அந்தாதியாகவும் அமைந்திருக்கும் ஒன்றையே நிரோட்டக யமக அந்தாதி என்று நம் மூதாதை யர்கள் தமிழில் வரையறுத்து வைத்துள்ளனர். இத்தகைய நிரோட்டக யமக அந்தாதி வகையில் போட்டியிடுவது என்று திருச்செந்தூர் புலவரும், சிவப்பிரகாசரும் போட்டியில் குதித்தனர்.

    முருகனை வணங்கிய சிவப்பிரகாச சுவாமிகள் உடனே 100 பாடல்கள் அடங்கிய திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதியைப் பாடி முடித்தார். போட்டிக்கு அழைத்த திருச்செந்தூர் புலவரோ ஒரு பாடலும் பாட முடியாமல் திணறியபடி இருந்தார். சிவப்பிரகாசர் 100 பாடல்கள் பாடியதும் அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

    போட்டியில் தோற்ற அவர், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அடிமை ஆனார். அவரை வெள்ளியம்பல சுவாமிகளிடம் அழைத்துச் சென்று சிவப்பிரகாச சுவாமிகள் ஒப்படைத்தார். ஆனால் வெள்ளியம்பலவாண சுவாமிகள் பெருந்தன்மையுடன் மன்னித்து அறிவுரைகள் கூறி திருச்செந்தூர் புலவரை அனுப்பி வைத்தார்.

    திருச்செந்தூர் முருகன் மீது சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய நிரோட்டக யமக அந்தாதி பாடல்கள் அபூர்வமானது. எல்லோராலும் பாட இயலாது. 100 பாடல்கள் திருச்செந்தூர் முருகன் மீது இயற்றிய அந்த தொகுப்பு திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி என்று அழைக்கப்படு கிறது.

    இந்த 100 பாடல்களில் 30 பாடல்கள்தான் கிடைத்தன. அந்த 30 பாடல்களும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிரோட்டகத்தில் ப, ம, வ, உ, ஒ ஆகிய எழுத்துக்கள் வராமல் செய்யுள்களை அமைக்க வேண்டும். கட்டளைக் கலித்துறையில் அமைக்கப்பட்ட நூல் இது.

    இந்நூலில் திருச்செந்தூர் முருகப்பெருமானின் சிறப்பும், வீரமும் அருளும், தந்தையான சிவபெருமானின் திருவிளையாடல்களும், மாமனான திருமாலின் பெருமையும் பாடப்படுகின்றன. முதலையுண்ட சிறுவனைப் பதிகம் பாடி சுந்தரர் எழுப்பியது போன்ற புராணச் செய்திக் குறிப்புகளும் காணப்படுகின்றன.

    திருச்செந்தூர் முருகன் மீது பாடப்பட்ட பாடல்களில் இது தனித்துவம் நிறைந்தது. திருச்செந்தூர் முருகனே இதை பாட வைத்ததாகவும் சொல்வார்கள். திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய இதே போன்று மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    Next Story
    ×