என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன்!
    X

    வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவப் பருவத்திலேயே அவர் எழுதிய `போற்றிப் பத்து` என்ற கவிதை `ஒற்றுமை` என்ற இதழில் வெளிவந்தது.
    • சங்க நூல்கள் காவியங்கள் பிரபந்தங்கள் இப்படிப் பலவற்றைப் படித்தார்.

    தமிழறிஞரும் எழுத்தாளரும் புகழ்பெற்ற பேச்சாளருமான வாகீச கலாநிதி கிருஷஷ்ணராயபுரம் வாசுதேவன் ஜகந்நாதன் என்கிற கி.வா.ஜ. அவர்கள், வாசுதேவ ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் 1906 ஏப்ரல் 11ஆம் நாள் மகனாகப் பிறந்தவர். கி.வா.ஜ. காலமான நாள் 1988 நவம்பர் 4.

    தம் 82ஆம் வயதில் காலமான அவர், அதற்குள் செய்துமுடித்த எழுத்துப் பணிகளும் பதிப்புப் பணிகளும் எண்ணற்றவை. புகழ்பெற்ற பேச்சாளராகவும் அவர் விளங்கினார்.

    கி.வா.ஜ. முருக பக்தர். இளம் வயதிலேயே காந்த மலை முருகனிடம் பேரன்பு கொண்டிருந்தார். பின்னாளில் தன் இல்லத்திற்கே காந்தமலை என்றுதான் பெயர் வைத்தார்.

    மாணவப் பருவத்திலேயே அவர் எழுதிய `போற்றிப் பத்து` என்ற கவிதை `ஒற்றுமை` என்ற இதழில் வெளிவந்தது. அவரது தமிழறிவை வியந்த நண்பர்கள் இளம்பூரணன் என்றுதான் அவரை மாணவப் பருவத்திலேயே அழைத்தார்கள்.

    வாலிப வயதில் சுதந்திரப் போரால் ஈர்க்கப்பட்டு நூல் நூற்றுக் கதர் உடுத்தலானார். இறுதிவரை கதர் ஆடையே அணிந்தார். தமிழ் நூல் மேலும் கதர் நூல் மேலும் அவருக்கிருந்த ஆர்வம் குன்றவேயில்லை.

    இளம்வயது முதலே அவருக்கு ஆன்மிக நாட்டம் அதிகமாக இருந்தது. சேந்தமங்கலத்தில் இருந்த சுயப்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். அவரிடம் தமக்குத் துறவு தரும்படி வேண்டினார். ஆனால் பெற்றோர் அனுமதியில்லாமல் துறவு தர இயலாது என மறுத்துவிட்டார் சுவாமிகள்.

    கி.வா.ஜ.வுக்குத் தமிழ்த் தாத்தா தான் திருமணம் செய்துவைத்தார். கி.வா.ஜ.வின் மனைவி பெயர் அலமேலு. அவருக்கு `சாமிநாதன், குமரன், முருகன்` என மூன்று புதல்வர்களும் `உமா` என்ற புதல்வியும் உண்டு.

    திருப்பூர் கிருஷ்ணன்


    திருமுருகாற்றுப்படை அரசு, தமிழ்க் கவி பூஷணம், உபன்யாச கேசரி, தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி என்று இன்னும் பற்பல பட்டங்கள் கி.வா.ஜ.வுக்கு உண்டு.

    ஆனால் வாகீச கலாநிதி என்ற பட்டத்தை மட்டும்தான் ஆசீர்வாதமாகக் கருதிப் போட்டுக் கொண்டார். காரணம் பட்டம் தந்தவரின் பெருமை. பட்டம் தந்தவர் காஞ்சி மகாப் பெரியவர்,

    தம் இருபத்தோரு வயதில் தமிழ்த் தாத்தா உ.வே.சா.விடம் தமிழ் மாணவராகச் சேர்ந்தார் கி.வா.ஜ.. உ.வே.சா. காலமாகிற வரை (1942) 14 ஆண்டுகள் அவரிடம் மாணவராக இருந்தார்.

    ராமன் பகைவர்களை வென்று சிறைப்பட்டிருந்த சீதையை மீட்டார். இவர் குருகுல வாசம் செய்து தமிழின் பெருமை அறியாத பாமரர்களிடமிருந்து பழந்தமிழ் ஏடுகளை வாங்கித் தமிழை மீட்டார்.

    தம் 35 வயதுவரை தமிழ்த் தாத்தாவின் மாணவனாக இருந்தார். உ.வே.சா.விடம் பல மாணவர்கள் தமிழ் பயின்றாலும் அவருக்கு அதிகம் பிடித்த மாணவர் கி.வா.ஜ. தான். உ.வே.சா. இல்லத்திற்கு எதிர் வரிசையில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு நாளில் 11 மணிநேரம் ஆசிரியருடனேயே இருந்து பாடங்கேட்டார்.

    பாடங்கேட்பது சில மணிநேரம். மற்றபடி அவர் இல்லத்திலேயே அமர்ந்து ஓலைச் சுவடிகளைப் படிப்பார். சங்க நூல்கள் காவியங்கள் பிரபந்தங்கள் இப்படிப் பலவற்றைப் படித்தார்.

    1930இல் உ.வே.சா.வுக்குக் காலில் ஒரு புண் ஏற்பட்டது. அப்போது குருவுக்கு அவர் செய்த பணிவிடை அவரை உ.வே.சா.வின் குடும்பத்தாருடன் நெருக்கமாகப் பிணைத்தது.

    அப்பொழுது முதல் உ.வே..சா.வின் பதிப்புப் பணியிலும் கி.வா.ஜ. ஈடுபடலானார். தக்கயாகப் பரணி நூல் முன்னுரையில்

    `இந்நூலைப் பதிப்பிக்கும்காலை உடனிருந்து எழுதுதல், ஆராய்தல், ஒப்புநோக்குதல் போன்ற பணிகளில் மோகனூர்த் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி கி.வா. ஜகந்நாத ஐயரின் உழைப்பு பாராட்டத்தக்கது` என எழுதி அவர் உழைப்புக்கு அங்கீகாரம் அளித்தார் உ.வே.சா.

    `எனக்குத் தள்ளாமை வந்துவிட்ட நேரத்தில் எனக்கு உதவியாக இறைவன்தான் உமமை எம்மிடத்தில் அனுப்பியிருக்கிறான்` என்று மனம் நெகிழ்ந்த உ.வே.சா., அவரைத் தம் குடும்பத்தில் ஒருவராகவே சேர்த்துக் கொண்டுவிட்டார்.

    1935 இல் உ.வே.சா.வுக்கு எண்பதாம் ஆண்டுவிழா நடைபெற்றது. பின் அவர் உடல் பெரிதும் தளர்ந்தது. நோயால் தாக்குண்டார்.

    கி.வா.ஜ.வுக்கு வெளியூர்களில் பெரிய பதவிகள் வந்தன. ஆனால் குருநாதருக்குப் பணிவிடை செய்வதைத் தவிர வகிக்கத் தக்க பெரிய பதவி ஒன்றுமில்லை என வந்த வாய்ப்பையெல்லாம் மறுத்துவிட்டார்.

    தந்தையை இழந்த மூன்றாம் நாள் குருவையும் இழந்தார் கி.வா.ஜ. தந்தையையும் குருவையும் அடுத்தடுத்து இழந்த துயர் கி.வா.ஜ.வைப் பெரிதும் பாதித்தது. எனினும் வாழ்வின் நிலையாமையை உணர்ந்திருந்த அவரது ஆன்மிக மனம் மெல்ல மெல்லத் தேறியது.

    உ.வே.சா.வின் மகன் கல்யாண சுந்தரமையர் எழுத நினைத்த வரலாறு அவர் விரைவில் மறைந்ததால் கைகூடவில்லை. பின் `என் ஆசிரியப் பிரான்` என்ற தலைப்பில் உ.வே.சா. அவர்களின் வரலாற்றை எழுதி நிறைவு செய்தவர் கி.வா.ஜ. தான்.

    மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அவர் சீடர் உ.வே.சா., அவர் சீடர் கி.வா.ஜ. எனத் தமிழ்சார்ந்த குருபரம்பரை தொடர்ந்தது.

    கலைமகள் மாத இதழில் உ.வே.சா. பரிந்துரையின் பேரில் கி.வா.ஜ. உதவி ஆசிரியரானார். இதனிடையே வித்வான் இறுதித் தேர்வு எழுதி முதல் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேறினார். அதற்காக திருப்பனந்தாள் மடம் தரும் ஆயிரம் ரூபாய்ப் பரிசைப் பெற்றார்.

    கலைமகள் ஆசிரியராக இருந்த டி.எஸ். ராமசந்திர ஐயர் காலமானார். அதனைத் தொடர்ந்து ஹரிஜன் சாஸ்திரி எனப் பெயர்பெற்ற ஆர்.வி. சாஸ்திரி கலைமகள் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். கலைமகள் அதிபர் நாராணயசாமி ஐயர் உ.வே.சா.வுடன் கலந்துபேசி துணையாசிரியராக இருந்த கி.வா.ஜ.வைப் பின்னர் ஆசிரியராக்கினார்.

    கலைமகள் இதழில் `புதுமைப்பித்தன், அழகிரிசாமி, சி.சு. செல்லப்பா, த.நா. குமாரசாமி, சிதம்பர சுப்பிரமணியன், நா. பார்த்தசாரதி, தி.சா.ராஜு, ஆர்வி, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன்` போன்ற சிறந்த எழுத்தாளர்களின் கதைகளையெல்லாம் வெளியிட்டார். கலைமகளில் நாவல் போட்டி நடத்தினார்.

    கி.வா.ஜ. சிறந்த எழுத்தாளரும் கூட. நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். அவரது பழந்தமிழ்ப் பாடல் விளக்கக் கட்டுரைகள் நெஞ்சை அள்ளுபவை.

    அவர் சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். ஜோதி என்ற புனைபெயரில் ஏராளமான மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார். உடனடியாக வெண்பா எழுதுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார். பல திருமண அழைப்புகளுக்கு வெண்பாவிலேயே வாழ்த்துகள் எழுதி அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

    ஏராளமான சிறுகதைகள் எழுதிய சிறுகதை எழுத்தாளரும் கூட. அவரது சிறுகதைகள் பத்துத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவர் ஆசிரியராக இருந்த கலைமகளில் மட்டுமல்லாது ஆனந்த விகடன், தினமணி மலர்கள், சுதேசமித்திரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவர் கதைகள் வந்துள்ளன.

    `கலைஞன் தியாகம், அறுந்த தந்தி, பவழ மல்லிகை, நீலமணி, வளைச்செட்டி, அசையா விளக்கு, குமரியின் மூக்குத்தி, பூக்காரி` போன்ற இவரது சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ் வளர்ச்சிக் கழகம் தந்த பரிசுகளையும் இவர் சிறுகதைத் தொகுதிகள் பெற்றுள்ளன.

    சிறந்த கட்டுரையாசிரியர். சங்கப் பாடல் விளக்கங்கள், தமிழ் இலக்கிய அறிமுகங்கள்,தொல்காப்பியம் உருவான கதை போன்ற இவரது இலக்கியக் கட்டுரைகள் தனி முத்திரை பதித்தவை.

    திருமுருகாற்றுப் படை, அருணகிரிநாதரின் திருப்புகழ் போன்ற முருகக் கடவுள் சார்ந்த பக்தி இலக்கியங்களுக்கு உரை எழுதியிருக்கிறார்.

    இவரது `வீரர் உலகம்` என்ற இலக்கியப் படைப்பிற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. கம்பன் கழகம் இவர் நினைவாக இவரது பெயரில் ஒரு விருதை நிறுவி ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கி கெளரவித்து வருகிறது.

    மிகச் சிறந்த சொற்பொழிவாளர். தமிழ் இலக்கியங்களைக் கரைத்துக் குடித்த அவரது உரையைத் தமிழுலகம் விரும்பி வரவேற்றது. அவர் பேசாத இலக்கியத் தலைப்புமில்லை. அவர் போய்ப் பேசாத நாடுமில்லை.

    இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பர்மா, ஐரோப்பா போன்ற உலக நாடுகள் பலவற்றில் அவர் உரை நிகழ்த்தியுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்ட பெருமையும் அவருக்கு உண்டு.

    அவரது மேடைப் பேச்சிலும் சரி, உரையாடலிலும் சரி, பாயசத்தினிடையே முந்திரிப் பருப்பாய் சிலேடை நயம் இழையோடும். தமிழில் காளமேகப் புலவருக்குப் பிறகு சிலேடை நயத்தை அதிகம் பயன்படுத்தியவர் இவர்தான். அதனால் கி.வா.ஜ.வை உரைநடைக் காளமேகம் என்று சொல்வதுண்டு. அவரது சிலேடைகள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாகவும் வந்துள்ளன.

    பல இடங்களில் அலைந்து ஆயிரக்கணக்கான நாடோடிப் பாடல்களைத் தொகுத்தவர். 22000 பழமொழிகளையும் தொகுத்தார். அவற்றை எங்கு கேட்டாலும் முதலில் தனித்தனிக் காகிதங்களில் எழுதிக் கொள்வார். வீட்டுக்கு வந்ததும் அவற்றை அவற்றுக்கென்று உரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதிய பின்னரே மற்ற காரியங்களில் ஈடுபடுவார்.

    `பெண்கள் பாடு என்றால் பாடமாட்டார்கள். ஆனால் அவர்களிடம் நாம் பாடத் தொடங்கினால் பின்னர் நாணத்தை விட்டுப் பாட ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் பல நாட்டுப்புற சகோதரிகளிடமிருந்து இந்தப் பாடல்களைக் கேட்டு எழுதினேன்` எனக் குறிப்பிடுகிறார் கி.வா.ஜ.

    ஏற்றப் பாட்டுக்கள், திருமணப் பாட்டுக்கள், தெய்வப் பாடல்கள் என அவர் தொகுத்த பாடல்கள் பலவகைப் பட்டவை. கி.வா.ஜ. தொகுத்திராவிட்டால் அந்தப் பாடல்கள் காற்றில் கலந்து மறைந்திருக்கும். கி.வா.ஜ.வின் நூல்களை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

    தமிழ்த் தாத்தாவின் அன்புக்குரிய சீடராக, ஒப்புயர்வற்ற தமிழ் அறிஞராக வாழ்ந்து மறைந்த வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்களைத் தமிழுலகம் ஒருபோதும் மறக்காது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail

    Next Story
    ×