சிறப்புக் கட்டுரைகள்

உன்னை நீ அறிவாய்!
- தன்னைப் படைத்த கடவுளையே அறிந்து கொள்வதற்கு இணையானது ஆகும்.
- அடுத்தவர் மதிப்பீடுகளாலேயே நம்முடைய வாழ்க்கையின் மதிப்பீடு அளவிடப்பெறுகிறது என்பது தவறான கணிப்பு ஆகும்.
வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பதே வாழ்க்கை! என்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு செயல் அசைவிலும் நாம் கவனத்தோடு ஈடுபட வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் நமது வாழ்க்கையே மதிப்புமிக்கது ஆகும். விழிப்பது தொடங்கி, உறங்கப்போவது வரை.. ஏன் உறங்கிய பின்னரும்கூட, ஒவ்வொரு மனிதரும், தன்னைப்பற்றிய, தனது அங்கங்களைப் பற்றிய, தனது செயல் அசைவுகளைப் பற்றிய மிகுந்த கவனத்தோடு வாழ வேண்டியது அவசியமானது ஆகும். நமது அங்கங்களின் மதிப்புகளை, நமது வாழ்வியல் செயல்பாடுகளின் மதிப்புகளை ஆழமான நம்பிக்கையோடு தீர்மானித்துக்கொண்டு, அவற்றிற்கேற்பச் சிந்தனைத் திறத்தோடு வாழத் தொடங்கினால், உண்மையிலேயே நாம் வாழ்வது மதிப்புமிக்க வாழ்க்கையாக ஆகிப்போகும்.
நம்முடைய வாழ்வின் மதிப்பு என்பது என்ன?; நம்முடைய மதிப்பை எப்படி மதிப்பீடு செய்வது?; எந்தத் தராசு கொண்டு நம்மை நிறுத்துப் பார்ப்பது? நம்மை மதிப்பீடு செய்யச் சரியான நபர் யார்?.. இப்படிப் பல கேள்விகளோடு மனிதர் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றிய மதிப்பீட்டுத் தேடலில் ஈடுபடத் தொடங்கலாம்; உண்மையில் ஒவ்வொரு மனிதரும் தன்னை அறிந்து கொள்வது என்பதுகூடத், தன்னைப் படைத்த கடவுளையே அறிந்து கொள்வதற்கு இணையானது ஆகும். இதையே இன்னொரு வகையில், 'தன்னை அறிதலே கடவுளறியும் தத்துவம்' என்றும் கொள்ளலாம்.
ஓர் இளைஞன் திடீரெனக் கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவலோடு தவம் இயற்றத் தொடங்கினான்; இளைஞனின் புதுமையான ஆவலைப் புரிந்துகொண்ட கடவுள், அவனை ரொம்பவும் சோதித்துக் காலம் தாழ்த்தாமல், திடீரென அவன் கண்முன்னே தோன்றிக் காட்சி தந்து, "நான் தான் கடவுள்! உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். 'வாழ்க்கையின் மதிப்பு என்ன?. இதைத் தெரிந்துகொள்ள மிக்க ஆவலாய் இருக்கிறேன்!' என்றான் இளைஞன். கடவுள் அந்த இளைஞனின் கையில் ஒரு சிறிய கல்லைக் கொடுத்து, 'இதைக் கொண்டுபோய் ஊருக்குள் இருக்கும் வணிகப் பெருமக்களிடம் இதன் மதிப்பு எவ்வளவு என்று அறிந்து வா!. சாதாரண சாலையோர வியாபாரி தொடங்கி, நகரின் மிகப்பெரிய வைர வியாபாரி வரை சென்று மதிப்பை விசாரி!; ஆனால் யாரிடமும் விற்றுவிடாதே!. ஒவ்வொருவரும் சொல்லும் மதிப்பீட்டைக் கேட்டுக்கொண்டு வந்து என்னிடம் சொல்!. பிறகு நான் வாழ்க்கையின் மதிப்பைப் பற்றிச் சொல்கிறேன்!" என்றார் கடவுள்.
கல்லைப் பெற்றுக்கொண்டு கடைவீதிக்கு வந்த இளைஞன், ஓர் ஆரஞ்சுப்பழ வியாபாரியிடம் சென்று, கல்லைக் காண்பித்து," இதன் மதிப்பு எவ்வளவு?" என்று கேட்டான். அந்தக் கல்லை இருமுறையும் இளைஞனை ஒருமுறையும் ஏற இறங்கப் பார்த்த ஆரஞ்சு வியாபாரி," இந்தக் கல்லுக்கு, என்னிடமுள்ள ஆரஞ்சில் பனிரெண்டு பழங்கள் தரலாம்; அவை தாம் இந்தக்கல்லுக்கான மதிப்பு" என்றான் பழ வியாபாரி.
அந்த இடத்தைவிட்டு நகர்ந்த இளைஞன், கொஞ்சம் தொலைவில் இருந்த ஒரு காய்கறிக் கடைக்குச் சென்றான். வியாபாரியிடம், "இந்தக் கல்லின் மதிப்பு எவ்வளவு? இதைப் பெற்றுக்கொண்டு இதற்கு மாற்றாக நீ என்ன தருவாய்?" என்று கேட்டான். கல்லை வாங்கிக் கல்லாப் பெட்டிக்குள் போட்டுக்கொண்ட காய்கறி வியாபாரி, இதற்கு மாற்றாக, ஒரு சாக்குப்பை நிறைய உருளைக் கிழங்கு தருகிறேன்!; வீட்டிற்குக் கொண்டுபோய்ச் சமைத்துச் சாப்பிடு!" என்றான்.
காய்கறிக் கடைக்காரனிடம் கல்லைத் திரும்பப் பெற்றுக்கொண்ட இளைஞன் அதனை அருகில் இருந்த ஒரு பெரிய நகைக் கடைக்குக் கொண்டு சென்றான். கல்லை முழுமையாக ஆராய்ச்சி பண்ணிய நகைக் கடைக்காரர், இந்தக் கல்லுக்கு மதிப்பாக என்னால் ஒரு லட்சம் ரூபாய் காசாக வழங்க இயலும்" என்று பெருமிதமாகச் சொன்னார். "வேண்டாம்!. இது கடவுள் தந்தனுப்பிய கல்! வெறும் மதிப்பு மட்டுமே கேட்டு வரப்பணித்திருக்கிறார்!; கல்லைத் திருப்பித் தாருங்கள்! "என்றான் இளைஞன். உடனே நகைக்கடைக்காரர், "மேலும் ஐம்பதினாயிரம் சேர்த்து, ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் தருகிறேன்!" என்று பேரம் பேசத் தொடங்கினார்.
கல்லை வாங்கிக் கொண்டு அந்த ஊரிலேயே மிகப்பெரிய வைர நகைக் கடைக்குச் சென்றான் இளைஞன்; அங்குதான் அசல் அருவிலை மணிகள் எல்லாம் கிடைக்கும். கல்லைப் பெற்றுக்கொண்டு பரிசோதித்த வைர வியாபாரி, மிகுந்த மன மகிழ்ச்சியோடும், முக மலர்ச்சியோடும் இளைஞனைப் பார்த்துப் பேசினார், " இந்த விலை மதிக்க முடியாத கல்லை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? என்பது பெரிய புதிராக இருக்கிறது; இந்தக் கல்லை மதிப்பிட்டு விலைபேசி விற்கவோ, வாங்கவோ இந்த மண்ணில் யாராலும் முடியாது; உலகம் முழுவதையும் விலையாகப் பேசித், தனது வாழ்நாளையும் யாரால் முழுமையாக ஒப்படைக்க இயலுமோ… அவரால்கூட இந்தக் கல்லை வாங்கிவிட முடியாது. ஏனெனில் இந்த உலகிலேலேயே விலைமதிக்க முடியாத அரிய பொருள் இந்தக் கல்!" என்றார்.
கல்லை வாங்கிக் கொண்டு மீண்டும் கடவுளிடம் போய் நின்றான் இளைஞன்; நடந்ததையெல்லாம் விலாவாரியாக விளக்கிச் சொன்னான். மீண்டும் கேட்டான்,
'வாழ்க்கையின் மதிப்பு என்ன?' கடவுள் சிரித்துக்கொண்டே விளக்கத் தொடங்கினார். " நீ கொண்டு சென்ற கல் ஒன்றுதான்; ஆனால் மதிப்பீடுகள் வெவ்வேறானவை. ஆரஞ்சுப்பழ வியாபாரி, காய்கறி வணிகர், நகைக் கடைக்காரர், வைர வியாபாரி இவர்கள் அனைவரிடம் இருந்தும் நீ பெற்ற பதில்கள் தாம் உனது வாழ்க்கையின் மதிப்பைத் தீர்மானிக்கின்றன.
சுந்தர ஆவுடையப்பன்
நீ உண்மையில் விலை மதிக்க முடியாத 'மதிப்பை' உடைய வாழ்க்கைக்குச் சொந்தக்காரனாக இருக்கலாம்; ஆனால் சிலர் பழக்கடைக்காரர், காய்க்கடைக்காரரைப் போல உன்னைக் குறைத்து மதிப்பிடக்கூடும்; சிலர். நகைக் கடைக் காரரைப் போலச் சற்று உயர்த்தியும் மதிப்பீடு செய்யலாம். ஆனால் நமது வாழ்க்கையின் மதிப்பு, உலகில் எவர் மதிப்பீட்டையும் விஞ்சி நிற்கிற மதிப்பீடாகச், சிகரம் தாண்டிய உயரம் உடையதாகத் திகழ வேண்டும்.
உலகில் வாழ்க்கையின் மதிப்பு என்பது அவரவர் சிந்தையின், வாழ் தரத்தின் உயரம் சார்ந்ததாகவே அமைவு பெறுகின்றது. 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் போல மனிதர்களின் உள்ளத்தனையது உயர்வு' என்று கூட வள்ளுவப்பெருந்தகை இதன் சீர்மை பாராட்டுகிறார். அடுத்தவர் மதிப்பீடுகளாலேயே நம்முடைய வாழ்க்கையின் மதிப்பீடு அளவிடப்பெறுகிறது என்பது தவறான கணிப்பு ஆகும். அடுத்தவர் போற்றும் வாழ்வாக நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குமுன், முதலில் நாம் போற்றும் வாழ்வாக அது அமைகிறதா?: நாம் விரும்பும் வாழ்க்கையாக அதனை மாற்றிக்கொள்ள முடிகிறதா? என்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.
நம்மைப் பற்றிய மதிப்பை நாம் உயர்த்திக்கொள்வதன் மூலமாகத் தான் நமது வாழ்க்கையை மதிப்புமிக்க வாழ்க்கையாக வடிவமைத்துக்கொள்ள முடியும். நம்முடைய வாழ்க்கை குறித்த மதிப்பீட்டை முதலில் நமக்கு நாமே குறைத்து மதிப்பிடாமல், உயர்த்தி மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்; இது உயர் மனப்பான்மை அல்லது ஆணவப்போக்கு என்று கூட சிலர் எண்ணிப் பின் வாங்கலாம்.
ஆனால் எந்த நேரமும் தன்னைப்பற்றிய சோக மதிப்பீட்டிலேயே வாழ்க்கையை நடத்தினால், அது எப்போதும் மதிப்பு மிக்கதாக உயரவே உயராது. சிலருக்கு எப்போதும் அடுத்தவர்கள் அவரையே விடாது கண்காணித்துக் கொண்டிருப்பதாக எண்ணம் தோன்றும்; அவர்களுக்காக வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டுமே என்கிற பரபரப்புப் பற்றிக் கொள்ளும். தனக்கு எவருமே மதிப்பு மிக்க அங்கீகாரம் வழங்குவதில்லையே என்கிற கழிவிரக்கம் பற்றிக்கொண்டு, எந்தச் செயலிலுமே விரும்பி ஈடுபட முடியாத அளவுக்கு மனத்தை வெற்றிடம் தொற்றிக்கொள்ளும்.
இவற்றில் இருந்தெல்லாம் விடுபட்டு வெளி வருவதற்கு முதலில் தம்மைப் பற்றிய, தமது திறமைகளைப் பற்றிய மதிப்புகளில் நம்பிக்கை வைக்க வேண்டும். அடுத்தவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்கிற கவலையை அடிப்படையில் நம்மிடமிருந்து அகற்றி விட்டால் போதும்; சுதந்திர உணர்வு நம்மிடம் இருந்து பொங்கிப் புறப்படத் தொடங்கும். அடுத்தவர் நம்மைப் பற்றிப் பேசுவதை வைத்தே உழப்பிக்கொண்டிராமல், மனம் இலகுவாகி விட்டால், நமது செயலிலும், சிந்தையிலும் தன்னம்பிக்கை ஊற்றெடுத்துக் கிளம்பி, நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விடும்.
நம்மைப்பற்றி அடுத்தவர் நினைப்பது அப்புறம் இருக்கட்டும்; முதலில் நம்மைப்பற்றி நாம் பெருமையாகக் கருதுவதற்குப் பயிற்சி பெறுவோம். நம்மை எப்போதும் நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருந்தால், நம்முடைய செயல்களை, நம்முடைய மதிப்புகளை யார் பாராட்டுவார்? யார் கொண்டாடுவார்?.
இந்த உலகம் பொறாமையாளர்களின் கூடாரம். இந்த உலகில் நமக்கு இணையானவர்கள் மட்டுமல்ல; நம்மைவிடத் தகுதியில் குறைந்தவர்கள்கூட, நமது வளர்ச்சிகண்டு பொறாமைப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, சில இடங்களில் நம்மைவிடத் தகுதியில் பெரியவர்கள் கூட நம்மைக்கண்டு பொறாமைப் படுகிறார்கள். பெரும்பான்மையும் பொறாமைக் கண் கொண்டு மட்டுமே காணப் பழகி விட்டவர் களிடம் நம்மைப்பற்றி நல்ல மதிப்பீடுகளை எப்படி எதிர்பார்க்க முடியும். அவர்கள் சொல்வது எப்படி சரியான மதிப்பீடுகளாக ஏற்றுக் கொள்ளப்படும்?. எல்லா மதிப்பீடுகளும் அவர்களது அளவு கோல்களாலேயே அளக்கப்படுகின்றன.
நமக்கு இணையான அளவு கோல்களை நாம்தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும்?.
நாம் ஈடுபடும் சின்னச்சின்னச் செயல்களை எல்லாம் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்; நிகழுகின்ற சின்னச் சின்னத் தவறுகளுக்கெல்லாம் வருந்துவதோடு மட்டுமல்லால், நேர்ந்துவிட்ட தவறு மீண்டும் நிகழாமல் இருக்க உறுதி பூணுங்கள். நம்மிடமுள்ள திறமைகளை எல்லாம் தன்னம்பிக்கையோடு நமது மதிப்புகளாக வெளிக்கொணர அயராது பாடு படுங்கள்.
மனிதப்பிறப்பு மாண்புடைய பிறப்பு. அதன் ஒவ்வொரு செயலும் மதிப்பு மிக்கதாகவே இருக்கும். அடுத்தவர் நம்மைப் பார்த்துக் குறைகள் கூறலாம்; திருத்தங்கள் செய்யச் சொல்லலாம்; கண்ணை மூடிக்கொண்டு வாய்க்கு வந்தபடிப் பாராட்டி மகிழலாம்; நாம் எதற்குமே லாயக்கில்லை என்று தரைமட்டத்திற்கு அடித்தும் வீழ்த்தலாம். வருத்தப்படாதீர்கள்!; எதற்கும் வருத்தப்படாதீர்கள்!; வீணான பாராட்டிற்கும் மயங்கிப் போகாதீர்கள்!. நம்முடைய உயரம் என்னவென்பது அடுத்தவர் களைவிட நமக்குத்தான் தெளிவாகத் தெரியும்; தன்னம்பிக்கையோடு பயணப்படுங்கள்.
உலகம் உற்சாக உலகம்தான். ஆனால் அந்த உற்சாகம் அடுத்தவர் மூலமாக நூறு சதவீதம் வந்து விடும் என்று மட்டும் எண்ணி விடக்கூடாது. நம்முடைய மதிப்பை நன்றாகவே கணித்து வைக்கப் பழகிவிட்டால் அடுத்தவர் கணிப்புகளுக்குக் கலங்கவோ, களிப்பெய்தவோ அவசியம் இருக்காது. மதிப்புமிக்கது வாழ்க்கை; அதை மேலும் மேலும் மதிப்புமிக்கதாக ஆக்க, மதிப்புமிக்க செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.
தொடர்புக்கு 9443190098