என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    மகனாக மாறிய பிரித்விராஜ்- மீனா மலரும் நினைவுகள்
    X

    மகனாக மாறிய பிரித்விராஜ்- மீனா மலரும் நினைவுகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நகைச்சுவை காட்சிகளாக கதை முழுவதையும் சொல்ல சொல்ல கேட்க நன்றாக இருந்தது.
    • டைரக்டர் சொன்னது போலவே கதை வித்தியாசமாக இருந்தது.

    நடிகர் பிரித்விராஜை 'வாடா என் மூத்த மவனே...' என்று நான் அழைத்தால் எப்படி இருக்கும்! அப்படியும் நடந்தது!

    ஐதராபாத்தில் படப்பிடிப்பு தளத்தில் படமாக்கப்பட்ட முதல் காட்சி அது. ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பிரித்விராஜை அப்படித்தான் அழைத்தபடி வருவேன். அந்த காட்சி சூப்பராக அமைந்தது. ஷாட் முடிந்ததும் என் அருகில் பிரித்விராஜ் வந்தார். மெதுவாக 'மாம்... ஷாட் எடுத்து கொண்டிருந்த போது பலத்த வெடிச் சத்தம் கேட்டதே கவனிச்சீங்களா...? என்றார். வெடிச்சத்தமா.....? என்றதும் "ஆமாம்..... என் குட்டி இதயம்தான் அப்படி வெடித்து..." உங்களுக்கு சத்தம் கேட்கவில்லையா? என்று கேட்டு விட்டு அவரும் சிரித்து விட்டார்.

    நான் எனது மகனாக அவரை பாவித்ததை நினைத்து அவருக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அவருக்கு மட்டுமா? எனக்கும்தான்!

    அது ஒரு வித்தியாசமான மலையாள படம். 'புரோ டாடி' இதுதான் படத்தின் பெயர். படம் முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்தது.

    கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு எல்லோருமே சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்த படம் பற்றி பேச வந்தார்கள். எனக்கு மோகன்லால் ஜோடி என்றதும் மகிழ்ச்சி அடைந்தேன். நானும் மோகன்லாலும் இணைந்து நடித்த மலையாள படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களாக அமைந்தது.

    அந்த வரிசையில் மீண்டும் மோகன்லால் ஜோடி என்றதும் மகிழ்ச்சி. நகைச்சுவை காட்சிகளாக கதை முழுவதையும் சொல்ல சொல்ல கேட்க நன்றாக இருந்தது. அப்போது எனக்கு மகனாக நடிக்கப் போவது யார்? என்றேன். பிரித்விராஜ் என்றார்கள்.

    அதை கேட்டதுமே எனக்கு சிரிப்பு வந்து விட்டது. பிரித்விராஜ் என்ன சின்ன பையனா? அவர் ஒரு சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என்று மலையாள திரை உலகில் பன்முக திறமைகளோடு முன்னணி நட்சததிரமாக இருப்பவர்.

    அவர் எனக்கு மகனாக நடித்தால் எப்படி இருக்கும்? அவரது அம்மா வயதுக்கு நான் பொருத்தமாக இருப்பேனா? என்று ஏகப்பட்ட குழப்பங்களோடு கதை சொன்ன போதே டைரக்டரிடம் 'என்ன சார் இது....? மோகன்லால் ஜோடியாக நான். அது ஓ.கே! என் மகனாக பிரித்விராஜ் என்றால்... அது எப்படி...? என்று இழுத்தேன்.

    அப்போது டைரக்டர் 'மேடம் நீங்க. கதாபாத்திரங்களை வைத்து மட்டும் எடை போட வேண்டாம். கதை அமைப்பு நன்றாக இருக்கும். திரையில் வரும் போது ரொம்ப காமெடியாக இருக்கும். நிச்சயமாக ரசிகர்கள் ரசிப்பார்கள் என்றார். எனது எண்ணம் வேறு விதமாக இருந்தது. மலையாளத்தில் நானும் மோகன்லாலும் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே 'ஹிட்' படங்களாக அமைந்தவை. அதே போல் இந்த படமும் மோகன்லால் ஜோடியாக நடிப்பதால் நன்றாக வரும் என்ற நம்பிக்கையோடு ஒத்துக் கொண்டேன்.

    படத்தின் முதல் நாள் முதல் காட்சி படமாக்கப்பட்ட போதுதான் எங்களுக்குள் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    முதல் முறையாக மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பு முற்றிலும் ஐதாபாத்தில் நடந்ததும் இந்த படத்துக்குத்தான்.

    டைரக்டர் சொன்னது போலவே கதை வித்தியாசமாக இருந்தது. ஒரே நேரத்தில் மாமியராக இருக்கும் நானும் கர்ப்பிணியாக இருப்பேன். எனது மருமகளும் கர்ப்பமாக இருப்பார். சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் காட்சி அமைப்புகளை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

    44 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பட வேலைகள் முடிவடைந்ததும் தியேட்டர்களில் படத்தை வெளியிட எல்லோருக்கும் தயக்கமாக இருந்தது. ஏனென்றால் கொரோனா விலகினாலும் மக்களிடம் பீதி விலகவில்லை. எனவே தியேட்டருக்கு ஜனங்கள் வருவார்களா? என்ற சந்தேகம் இருந்தது. எனவே வேண்டாம் விஷப்பரீட்சை என்று படக்கு ழுவினர் படத்தை ஒ.டி.டி. தளத்தில் வெளியிட முடிவு செய்து வெளியிட்டார்கள்.

    படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் நகைச்சுவைகளும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது வித்தியாசமான படம்.

    வாழ்க்கை எவ்வளவோ அனுபவங்களை கற்றுத்தருகிறது. கடந்த காலங்களை கொஞ்சம் பின்னோக்கி திரும்பி பார்த்தால் பல விசயங்கள் ஆச்சரியத்தை தரும்.

    ஐந்து வயதில் நடிக்க வந்த போது எதுவும் தெரியாது. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போலத் தான் இருந்தேன். அப்போதெல்லாம் நடிப்புன்னா என்ன? என்பது கூட தெரியாது. டைரக்டர் சொன்னதை செய்வேன் அவ்வளவு தான். அப்போது கேட்டதெல்லாம் கிடைக்கும். முக்கியமாக எல்லோரும் சாக்லெட் வாங்கி தருவார்கள். அப்போது அந்த சாக்லெட் மட்டும் தான் எனக்கு சந்தோசத்தை தந்தது. வேறு எதைப்பற்றியும் அந்த வயதில் நினைக்க தோன்றவில்லை.

    குழந்தை பருவத்தை கடந்து கதாநாயகியாக ஆன பிறகுதான் பல விசயங்கள் தெரிய வந்தது. ஒரு சிறந்த கதாநாயகி என்று நான் நினைப்பதை விட பலர் என்னை லக்கி ஹீரோயின் என்று நினைத்ததும் பாராட்டியதும் தான் எனக்கு பெருமையாக இருந்தது.

    ஒவ்வொரு படத்திலும் நடித்த போது எவ்வளவோ கஷ்டங்கள், சிரமங்களை தாங்கி இருக்கிறேன். ஆனால் அந்த படம் வெளியாகி வெற்றி பெறும் போது பட்ட கஷ்டங்களும், சிரமங்களும் மறைந்து போகும்.

    சினிமா வெறும் நடிப்பு தான். அது நிஜம் கிடையாது. டீன் ஏஜ் பருவத்தில் கதா நாயகியாக நடித்த போது பல படங்களில் கர்ப்பிணி, பிரசவிக்கும் தாய் என்ற வேடங்களில் நடித்து இருக்கிறேன். அந்த அனுபவம் கூச்சமாகவும், ஒருவித அனுபவத்தையும் கொடுத்தது. அதை கூட குக்கிராமங்களில் படப்பிடிப்பு நடந்த போது கிராமத்து ஜனங்கள் நிஜமாகவே நான் கர்ப்பிணி என்று நினைத்து வருத்தப் பட்டதை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. அதே நேரம் மற்றவர்களை மனிதாபி மானத்தோடு பார்க்கும் கள்ளமில்லா அவர்களி்ன உள்ளம் மெய்சிலிர்க்க வைத்தது.

    ஆனால் நிஜ வாழ்க்கையில் நானும் கர்ப்பிணியாகி, குழந்தையை பெற்றெடுத்தது மறக்க முடியாத அனுபவம்.

    தாய்மை உணர்வு என்பது அனுபவித்து ரசிப்பது. அது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இப்படிப்பட்ட எத்தனையோ அனுபவங்களின் தொகுப்புதானே வாழ்க்கை...? அதிர வைத்த மற்றொரு அனுபவத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்...)

    Next Story
    ×