கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது நேபாளம்
- ஐரீ 23 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- புர்டெல் 35 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். ஷேக் 27 பந்தில் 33 ரன்கள் அடித்தார்.
டி20 உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சி பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து- நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் மைக்கேல ஜோன்ஸ் அபாரமாக விளையாட, ஜார்ஜ் முன்சே நிதானமாக விளையாடினார். முன்சே 29 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பிரெண்டன் மெக்கல்லம் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கிடையே மைக்கேல் ஜோன்ஸ் 45 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர் ஆட்டமிழக்கும்போது ஸ்காட்லாந்து 15.2 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் ஸ்காட்லாந்து விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தது. இறுதியாக 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. நேபாளம் அணி சார்பில் சோம்பால் கமி 3 விக்கெட்டும், நந்தன் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான குஷால் புர்டெல், ஆசிஃப் ஷேக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புர்டெல் 35 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். ஷேக் 27 பந்தில் 33 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த கேப்டன் ரோஹித் பவுடல் 16 ரன்னில் வெளியேறினார்.
அப்போது நேபாளம் 13.2 ஓவரில் 98 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து திபேந்திர சிங் ஐரீ உடன் குல்சன் ஷா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நேபாளம் 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐரீ 23 பந்தில் 50 ரன்களும், குல்சன் ஜா 17 பந்தில் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் தொடரை நேபாளம் நிறைவு செய்துள்ளது.





