விளையாட்டு

சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே.-பஞ்சாப் நாளை மோதல்
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.
- 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோற்றது.
சென்னை:
ஐ.பி.எல். போட்டியின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோற்றது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதை பிறகு ஆர்.சி.பி.(50 ரன்), ராஜஸதான் ராயல்ஸ் (6 ரன்), டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்), பஞ்சாப் (18 ரன்), கொல்கத்தா (8 விக்கெட்) ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோற்றது. தனது 7-வது ஆட்டத்தில் லக்னோவை (5 விக்கெட்) வீழ்த்தியது. அதன் பிறகு மும்பையிடமும் (9விக்கெட்), சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் (5 விக்கெட்) தோற்றது.
சி.எஸ்.கே. அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது . எஞ்சிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் கவுரவமான இடத்தை பிடிக்கும். நியூ சண்டிகரில் நடந்த போட்டியில் பஞ்சாப்பிடம் தோற்று இருந்தது. அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3-வது வெற்றிக்காக தொடர்ந்து காத்திருக்கிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 6- வது ஆட்டமாகும். இங்கு முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற 4 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லையுடன் 11 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது.