கால்பந்து

உலக கோப்பை கால்பந்து 2026: ஒரேநாளில் தகுதி பெற்ற 8 நாடுகள்
- இதுவரை 42 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரியவந்துள்ளது.
- இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.
செவில்லே:
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
நேற்று ஒரே நாளில் முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயின், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து உள்பட 8 நாடுகள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றன.
ஐரோப்பா கண்டத்தில் 'இ' பிரிவில் நடந்த தகுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின்-துருக்கி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதன் மூலம் ஸ்பெயின் அணி 16 புள்ளிகளுடன் அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்து தகுதிப்பெற்றது.
2010-ம் ஆண்டு உலக சாம்பியனான ஸ்பெயின் தொடர்ச்சியாக 13-வது முறை உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை பெற்றது. ஒட்டுமொத்தமாக 17-வது தடவையாக தகுதி பெற்றுள்ளது.
'ஜே' பிரிவில் நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 7-0 என்ற கோல் கணக்கில் லிச்சென்ஸ் டீன் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 18 புள்ளியுடன் தகுதிபெற்றது. தொடர்ந்து 4-வது தடவையாகவும், ஒட்டு மொத்தத்தில் 15-வது முறையாகவும் உலக கோப்பையில் ஆட உள்ளது. 2018-ல் 3-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாகும்.
'எச்' பிரிவில் முதல் இடத்தை பிடித்து ஆஸ்திரியா 8-வது முறையாக உலக கோப்பைக்கு தகுதிபெற்றது. 1954-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்ததே ஆஸ்திரியாவின் சிறந்த நிலையாகும். 28 ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் ஆடுகிறது. 'பி' பிரிவில் இருந்து சுவிட்சர்லாந்தும் (13-வது தடவை), 'சி'பிரிவில் இருந்து ஸ்காட்லாந்தும் (9-வது தடவை) தகுதிபெற்றன.
வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து பனாமா, ஹைதி (2-வது முறை) உலக கோப்பைக்கு தகுதிபெற்றன. 52 ஆண்டுகளுக்கு பிறகு ஹைதி உலக கோப்பையில் ஆட உள்ளது. இதேபோல அங்கிருந்து முதல் முறையாக குராசா நாடு தகுதிபெற்றது.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நாடுகள் வருமாறு:-
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெ கிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உரு குவே, கொலம்பியா, பரா குவே, மொராக்கோ, துனி சியா, எகிப்து, அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே, இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல், பிரான்ஸ், குரோஷியா,போர்ச்சுக்கல், நார்வே, ஜெர்மனி, நெதர் லாந்து, பெல்ஜியம், ஆஸ்தி ரியா, சுவிட்சர்லாந்து. ஸ்பெ யின், ஸ்காட்லாந்து, பனாமா, ஹைதி, குராசா.
3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றில் இருந்து செல்லும் 39 அணிகள் என இதுவரை 42 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரியவந்துள்ளது. இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.





