கால்பந்து

உலக கோப்பை கால்பந்து போட்டி- 26 ஆண்டுகளுக்கு பிறகு நார்வே தகுதி
- போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும்.
- ரோமில் நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இத்தாலியை நார்வே தோற்கடித்தது.
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ம் ஆண்டு போட்டியைவிட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனி சியா, எகிப்து, அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே, இங்கிலாந்து, கத்தார், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல், பிரான்ஸ் , குரோஷியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
நேற்று நடந்த போட்டி முடிவில் போர்ச்சுக்கல் தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து 29-வது நாடாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நார்வே தகுதி பெற்றது.
ரோமில் நடந்த ஆட்டத்தில் அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் இத்தாலியை தோற்கடித்தது. நட்சத்திர வீரர் ஹாலண்ட் 2 கோலும் (77 மற்றும் 79-வது நிமிடம்), நுசா (63), லார்ஸ் லார்சன் (93) ஆகியோர் நார்வே அணிக்காகவும், எஸ்போசிஸ்டோ (11), இத்தாலி அணிக்காகவும் கோல் அடித்தனர்.
குரூப் 1 தகுதி சுற்றில் நார்வே 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு பிரான்சில் நடந்த போட்டியில் தகுதி பெற்றது. ஒட்டு மொத்தத்தில் 4-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது.
3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 29 அணிகள் என இதுவரை 32 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 16 அணிகள் தகுதி பெற வேண்டும்.





