விளையாட்டு

கிறிஸ் கெய்லுக்கு அடுத்தப்படியாக அதிவேகத்தில் சதம்- 14 வயதில் புதிய வரலாறு படைத்தார் சூர்யவன்ஷி
- 20 ஓவர் போட்டிகளில் இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்தார்.
- சூர்யவன்ஷியின் ஸ்கோரில் 94 ரன் பவுண்டரி, சிக்சர் மூலம் வந்தது. இதுவும் புதிய சாதனையாகும்.
ஐ.பி.எல். போட்டியில் நேற்று குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 210 ரன் இலக்கை 25 பந்து எஞ்சி இருந்த நிலையில் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் இந்த வெற்றிக்கு தொடக்க வீரரும், 14 வயதே நிரம்பியவருமான வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான ஆட்டமே காரணமாகும்.
ஐ.பி.எல்.லில் தனது 3-வது போட்டியிலேயே அவர் சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 38 பந்துகளில் 101 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 11 சிக்சர்களும் அடங்கும். சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்தார்.
இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிவேகத்தில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை சூர்ய வன்ஷி படைத்தார். அதே நேரத்தில் இந்திய வீரர்களில் அதிவேகத்தில் சதம் அடித்து புதிய வரலாறு நிகழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் (பெங்களூரு) 2013-ம் ஆண்டு புனே வாரியர்சுக்கு எதிராக 30 பந்தில் சதம் அடித்தார். அவருக்கு அடுத்தப்படியாக வைபவ் சூர்யவன்ஷி இருக்கிறார். இந்திய வீரர்களில் யூசுப் பதான் (ராஜஸ்தான் ராயல்ஸ்) 2010-ம் ஆண்டு மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் செஞ்சுரி அடித்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை இளம் வீரர் சூர்யவன்ஷி முறியடித்தார்.
ஐ.பி.எல்.லில் அதிவேகத்தில் சதம் அடித்த முதல் 3 வீரர்களில் கெய்ல் (30 பந்து), சூர்யவன்ஷி (35), யூசுப் பதான் (37) உள்ளனர்.
20 ஓவர் போட்டிகளில் இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்தார். அவருக்கு 14 வயது 32 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மகாராஷ்டிரா வீரர் விஜய் ஜோல் மும்பைக்கு எதிராக 18 வயது 118 நாட்களில் சதம் அடித்து இருந்தார்.
ஐ.பி.எல். போட்டிகளில் இளம் வயதில் சதம் அடித்து இருந்தவர் மனீஷ் பாண்டே. 2009-ம் ஆண்டு அவர் தனது 19 வயது 253 நாட்களில் செஞ்சுரி அடித்து இருந்தார். இந்த சாதனையையும் சூர்யவன்ஷி முறியடித்தார். மேலும் இளம் வயதில் அதிவேகத்தில் அரை சதம் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்களில் அவர் முரளி விஜய்யுடன் இணைந்து முதல் இடத்தை பிடித்தார்.
சி.எஸ்.கே. அணிக்காக ஆடிய முரளி விஜய் 2010 -ல் மும்பைக்கு எதிராக 11 சிக்சர்கள் அடித்தார். சூர்யவன்ஷி நேற்று 11 சிக்சர்கள் அடித்து அதை சமன் செய்தார்.
முரளி விஜய், சூர்ய வன்ஷி ஆகியோருக்கு அடுத்தப்படியாக சஞ்சு சாம்சன் 10 சிக்சர் அடித்துள்ளார். சர்வதேச வீரர்களில் கெய்ல் 17 சிக்சர்களும், மேக்குலம் 13 சிக்சர்களும், டி வில்லியம்ஸ் 12 சிக்சர்களும் ஒரு ஆட்டத்திலும் அடித்துள்ளனர்.
சூர்யவன்ஷியின் ஸ்கோரில் 94 ரன் பவுண்டரி, சிக்சர் மூலம் வந்தது. இதுவும் புதிய சாதனையாகும்.