தமிழ்நாடு செய்திகள்

வண்டல் மண் எடுக்க லஞ்சம் வாங்கி கைதான பொதுப்பணித்துறை ஊழியர் ஜெயிலில் அடைப்பு
- 500-க்கும் மேற்பட்ட குளங்களில் வண்டல் மண் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருவட்டார் அருகே அருவிக்கரை மணக்குன்று சிற்றாறு பட்டணம் கால்வாய் பாயும் இடத்தில் உள்ள பெரும்குளத்தில் மண் எடுக்க அதே பகுதியை சேர்ந்த ராமையன் என்பவர் விண்ணப்பித்திருந்தார்.
ராமையனுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இலவச அனுமதி சீட்டு பெறுவதற்கு ராமையன் ஒப்பந்ததாரரான பிரைட்டை அனுப்பி வைத்தார்.
அப்போது பிரைட்டிடம் பொதுப்பணி துறை ஊழியர் ரசல்ராஜ் இலவச அனுமதி சீட்டு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரைட் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சால்வன்துரை, இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தலைமையிலான போலீசார் பிரைட்டிடம் ரசாயன பவுடர் தடவி பணத்தை கொடுத்து அனுப்பினார்கள். ரசல்ராஜிடம் பணம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரசல்ராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ரசல்ராஜ் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டதையடுத்து அவர் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட குளங்களில் வண்டல் மண் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.