தமிழ்நாடு செய்திகள்

விபத்து ஏற்படுத்திய கார்
பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து - 2 பேர் பலி
- திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது.
- விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கழுவனை சேரியை சேர்ந்தவர்கள், காரியாபட்டியில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அருகே செட்டி குறிச்சி விளக்கு அருகே சென்று கொண்டிந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் கோயமுத்தூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது.
இதில் கழுவனை சேரியை சேர்ந்த முத்து மகன் சடைய கருப்பன் (வயது 35), அதே பகுதியை சேர்ந்த முத்துராசு மகன் முத்துப்பாண்டி (35) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து பந்தல்குடி இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.





