ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகசெந்தில், விசைத்தறிகூட அதிபர். இவரது மகள் நாக அட்சயா (வயது 19). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவார் என கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிவின் (22) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. வழக்கம்போல் நட்புடன் தொடங்கிய இவர்களின் பழக்கம் முதலில் நண்பர்களாக தொடங்கி, காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. நாக அட்சயாவை மனதார காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் லிவின் வலைதள பதிவில் கூறியுள்ளார்.
வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து முதலில் தயங்கிய அவர் பின்னர் ஏற்பட்ட மனமாற்றத்தால் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கர்நாடக மாநிலத்திற்கு செல்ல நாக அட்சயா முடிவு செய்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்.
இதற்கிடையே நாகஅட்சயாவிடம், அவரது வலைதள காதலன் லிவின், தற்போது நீ இங்கு வந்தால் நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் தங்குவதற்கு வீடு எதுவும் தனியாக இல்லை என்பதால் வீடு பார்த்து விட்டு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். மேலும் வீடு பார்ப்பதற்கு பணம் தருமாறும் கேட்டுள்ளார். இதை நம்பிய நாகஅட்சயா காதலன் லிவினை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையம் வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார்.
அதை பெற்றுக்கொண்டு கர்நாடகா திரும்பிய லிவின், தனக்கு பணம் போதவில்லை எனவே மேலும் ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என நாகஅட்சயாவிடம் கேட்டுள்ளார். இதற்கிடையே காதலன் லிவினின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த நாகஅட்சயா மீண்டும் ராஜபாளையத்திற்கு வந்து அந்த பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனிடையே, லிவின் குறித்து நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், லிவின் வருகைக்காக காத்திருந்த வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அசோக்பாபு தலைமையிலான போலீசார் திட்டமிட்டபடி அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும் நாகஅட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக லிவினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் 25 பவுன் நகை மோசடி செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் அதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், அது போன்ற நடவடிக்கைகளில் ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்கள் என்று பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்த போதிலும், தொடர்ந்து பலர் பணத்தையும், பொருளையும் இழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.