தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் நிறுத்திவிட்டார்கள்- இ.பி.எஸ்
- அனுமதி பெறாத கட்டிடங்களை கிராம ஊராட்சி நிர்வாகமே சீல் வைக்கலாம் என்று அரசு கூறுகிறது.
- மக்களின் பிரச்சனை என்ன என்றே தெரியாத ஒரு அரசாகத்தான் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் மரியாதை கிடையாது. நேர்மையாக பணியாற்றுபவர்களை உடனடியாக சஸ்பெண்டு செய்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இது ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல என்று கூறினார்.
மத்திய மந்திரி அமித்ஷாவை நான் சந்திப்பது குற்றம் என்றால், முதலமைச்சரும், அவரது மகனும் சென்று அவர் வீட்டு கதவை தட்டினார்களே அதற்கு பெயர் என்ன? அவர்கள் சந்தித்தால் தவறு இல்லை. நாங்கள் சந்தித்தால் தவறு. இந்திய நாட்டுடைய உள்துறை மந்திரிதானே அவர். வேறு யாரும் இல்லையே. அவரை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது.
நான் டெல்லி சென்றவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடப்பாடி டெல்லி சென்றிருக்கிறார் என்று கருத்து தெரிவித்தார். ஏதோவொரு சூழ்நிலையில் அமித்ஷாவை சந்தித்தால் தமிழ்நாட்டு பிரச்சனைகளை கூறுங்க என்று அவரே சொல்லிவிட்டு, இப்படியான கேள்விகளை அவர்களே கேட்பது நியாயம் தானா?.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவருடைய அமைச்சர்களும் அனைத்து இடங்களிலும் சொல்வது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 99 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்கிறார்கள். அவர்கள் கூறிய 525 அறிவிப்புகளில் ஒரு 10 அறிவிப்புகளை முன்வைத்து புதிய பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். ஸ்க்ராட்ச் கார்டுகள் மூலமாக அ.தி.மு.க நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வழங்கி அவர்கள் நிறைவேற்றப்பட்டது எது? நிறைவேற்றப்படாதது எது? என கேள்வி எழுப்பி உள்ளோம்.
அனுமதி பெறாத கட்டிடங்களை கிராம ஊராட்சி நிர்வாகமே சீல் வைக்கலாம் என்று அரசு கூறுகிறது. மக்களின் பிரச்சனை என்ன என்றே தெரியாத ஒரு அரசாகத்தான் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நானும் கிராமத்தில் உள்ளவன்தான். ஒரு தோட்டத்தில் வீடு இருந்தால் அனுமதி வாங்க சொல்வது நியாயம். அனுமதி வாங்கலைன்னா உடனே சீல் வைக்கலாம் என்பதெல்லாம் நடைமுறையில் இல்லாத ஒரு நிகழ்வு. மக்களுக்கு முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ரூ.7 ஆயிரத்து 50 கோடிக்கு லேப்டாப் கொடுத்துள்ளோம். தாலிக்கு தங்கமும் கொடுத்து கொண்டுதான் இருந்தோம். இந்த 4 ஆண்டு ஆட்சியில்தான் கொடுக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நேரத்தில்தான் லேப்டாப்க்கு என்று டெண்டர் அறிவிக்க முடியாமல் ஓராண்டு காலம் எல்லா பணிகளும் தள்ளிப்போனது. பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் அதனை கைவிட்டுவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டங்களை எல்லாம் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைவிட்டு விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.