தமிழ்நாடு செய்திகள்

கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நேர அதிகரிப்பு அமலுக்கு வந்தது
- கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் சீசன் களைகட்டி உள்ளது.
- பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இந்த படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த படகில் பயணம் செய்வதற்காக சாதாரண கட்டணமாக நபர் ஒன்றுக்கு தலா ரூ.75 வீதமும், கியூவில் காத்து நிற்காமல் நேரடியாக செல்வதற்காக சிறப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு தலா ரூ.300 வீதமும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போது பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன் களைகட்டி உள்ளது. இதனால் மற்ற நாட்களை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பம்-குடும்பமாக கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.
இந்த சீசனில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். இந்த சீசன் நேரத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வட்டக்கோட்டைக்கு இயக்கப்படும் திருவள்ளுவர் சொகுசு படகை சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. அதேபோல விவேகானந்தா படகையும் சின்னமுட்டத்தில் கரை ஏற்றி பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது. இதனால் தற்போது குகன் மற்றும் பொதிகை படகு மட்டுமே விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மாலை 4 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதால் அதன் பிறகு படகு துறைக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினம் தினம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்ல முடியாமலும் கண்ணாடி பாலத்தை பார்க்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லக்கூடிய அவலநிலை இருந்து வருகிறது. தினமும் மாலை 4 மணிக்கு பிறகு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை படகுத்துறைக்கு வந்து கண்ணாடி பாலத்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலை இருந்து வந்தது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காலங்களில் மட்டும் 3 நாட்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை படகு போக்குவரத்து கூடுதலாக 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதேபோல கோடை விடுமுறை சீசன் காலங்களில் மாலை 4 மணிக்கு பிறகு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை தவிர்க்கும் வகையில் கோடை காலம் முடியும் வரை படகு போக்குவரத்து நேரத்தை காலை 8 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 2 மணி நேரத்துக்கு முன்னதாக அதிகாலை 6 மணிக்கு தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனவே சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கோடை விடுமுறை சீசன் முடியும் வரை கண்ணாடி பாலத்தை பார்க்க படகு போக்குவரத்து நேரத்தை நீட்டிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்குமா? என்று மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதன் எதிரொலியாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று முதல் படகு போக்குவரத்தை காலை 8 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக காலை 7 மணிக்கு தொடங்குவதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த படகு போக்குவரத்து நேரம் மாற்றம் கோடை கால சீசன் முடியும் நாளான ஜூன் 1-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அதிகாலை 6.45 மணிக்கு படகு துறையில் உள்ள டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு படகு டிக்கெட் விநியோகம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து படகு போக்குவரத்து காலை 7 மணிக்கு தொடங்கியது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மிகுந்த ஆர்வத்துடன் படகில் பயணம் செய்தனர். இந்த படகு போக்குவரத்து நேர மாற்றத்தை கண்காணிப்பதற்காக சென்னையில் இருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பொது மேலாளர் (இயக்கம்) தியாகராஜன் இன்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.