தமிழ்நாடு செய்திகள்

ஊட்டி அருகே போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை: போலீசார் அதிர்ச்சி
- நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவர் சிறுத்தை வெளியே செல்லும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- உடனடியாக போலீஸ் நிலையத்தின் வாசல் கதவை சாத்திவிட்டு சென்றார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த நடுவட்டம் பகுதியில் சமீப நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை சம்பவத்தன்று இரவு நடுவட்டம் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது.
தொடர்ந்து ஒவ்வொரு அறையாக சென்று சாப்பிடுவதற்கு ஏதேனும் உணவு கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தது. ஆனாலும் போலீஸ் நிலையத்தில் சிறுத்தைக்கு தீனி எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுத்தை பின்னர் மெதுவாக வெளியே புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவர் சிறுத்தை வெளியே செல்லும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் உடனடியாக போலீஸ் நிலையத்தின் வாசல் கதவை சாத்திவிட்டு சென்றார்.
இந்த காட்சிகள் நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இது தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே நடுவட்டம் போலீஸ் நிலையத்துக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அங்கு வேலை பார்க்கும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ச்சியாக காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.