தமிழ்நாடு செய்திகள்

முன்பு கூட்டணி இல்லை என்றவர், இப்போது பாஜகவை நன்மை பயக்கும் கட்சி என்கிறார்- இ.பி.எஸ் மீது அமைச்சர் தாக்கு
- எங்களுக்கு கூடும் கூட்டத்தை விட அங்கு கூடிய கூட்டம் குறைவுதான்.
- பா.ஜ.க. அரசு ஆளில்லா ரெயில்வே கேட்டுக்கு தீர்வு காண மாட்டார்கள். பாலம் கூட மாநில அரசுதான் கட்டி வருகிறது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி முன்பு இது போன்றுதான் பிரசாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் தி.மு.க. வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். இந்தமுறை இப்போது தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியை ஆரம்பித்திருக்கிறார். நாங்கள் முன்னரே எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.
அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை. அதனால் பா.ஜ.க. வை நன்மை பயக்கும் கட்சி என்று மாற்றுகிறார். நாங்கள் என்ன நன்மை செய்யாமலா இருக்கின்றோம்.
முன்பு பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று கூறினார். தற்போது கூட்டணி வைத்து நன்மை பயக்கும் கட்சி என்று கூறுகிறார். அதனை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிசாமிக்கு கூடும் கூட்டத்தை விட பல மடங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. பிரசாரத்தின் தொடக்க இடம் என்பதால் அதனை ஒருங்கிணைப்பு செய்து அந்த கூட்டத்தைக் கூட்டி உள்ளனர்.
எங்களுக்கு கூடும் கூட்டத்தை விட அங்கு கூடிய கூட்டம் குறைவுதான். நாளை முதலமைச்சர் திருவாரூர் வருகிறார். திருவாரூருக்கு வந்து பாருங்கள். முதலமைச்சருக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று. 15-ந்தேதி மயிலாடுதுறைக்கு முதலமைச்சர் வருகிறார். அப்போது பாருங்கள் யாருக்கு கூடிய கூட்டம் அதிகம் என்று.
ஓரணியில் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது. அனைத்து இடத்திலும் அதிகப்படியான உறுப்பினர்கள் சேருகின்றனர். மக்களே முன்வந்து சேருகின்றனர். மிகவும் பிரியமாக இருக்கின்றனர். சர்வர் சரியாக வேலை செய்யும் இடத்தில் எல்லாம் 30 ஆயிரம் பேர் வரை சேர்ந்துள்ளனர்.
சர்வர் சில இடங்களில் வேலை செய்யவில்லை. அந்த இடத்தில்தான் கொஞ்சம் தாமதம் ஆகிறது. சர்வர் வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக இருக்கிறது. பா.ஜ.க. அரசு ஆளில்லா ரெயில்வே கேட்டுக்கு தீர்வு காண மாட்டார்கள். பாலம் கூட மாநில அரசுதான் கட்டி வருகிறது.
பாலம் இணைப்பு கூட கொடுக்கவில்லை, நிலத்தை கையகப்படுத்தி நாங்கள் கொடுக்காமல் இல்லை, நிலம் கையகப்படுத்தும் பொழுது நிலத்திற்கு சொந்தக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகுதான் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும் சூழல் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.