தமிழ்நாடு செய்திகள்

தமிழக அரசு வெளிப்படத் தன்மையுடன் செயல்படுகிறது- அமைச்சர் ரகுபதி
- மது விற்பனை அதிகமாக நடைபெறும் 10 மாநிலங்களுக்குள் தமிழ்நாடு இல்லை.
- மதுபான கொள்முதல் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு இருந்தால் மத்திய அரசு கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ளலாம்.
புதுக்கோட்டை:
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொகுதி சீராய்வு குறித்து பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஒருங்கிணைத்து கலந்து ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் 58 கட்சிகள் கலந்து கொண்டன.
பாதிக்கப்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது தென் மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் 23.4 சதவீதம் ஆகவும் வடமாநிலங்களின் வளர்ச்சி சதவீதம் 24.39 ஆகவும் உள்ளது.
மக்கள் தொகையை பொறுத்தவரை தென் மாநிலங்களில் 12.53 சதவீதம் கட்டுப்படுத்தி உள்ளது. ஆனால் வட மாநிலங்கள் 21.83 சதவீதம் ஆக உள்ளது. பொருளாதார ரீதியில் தென் மாநிலங்கள் பங்களிப்பு 36 சதவீதம், வட மாநிலங்களில் பங்களிப்பு 20 சதவீதமே உள்ளது.
ஆனால் தென் மாநிலங்களில் கிடைக்கும் நிதி பகிர்வு 27 சதவீதமாக உள்ளது. வடமாநிலங்களில் இருந்து கிடைக்கக்கூடிய பகிர்வு தொகை 42.5 சதவீதம் ஆக உள்ளது. பட்ஜெட்டில் 100 ரூபாய்க்கு தமிழ்நாட்டுக்கு 29 பைசா மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
அதைப்போல் கர்நாட காவுக்கும் 14 ரூபாய் கொடுக்கப்படுகிறது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவில் 100 ரூபாய்க்கு 900 ,400 ரூபாய் விகிதத்தில் ஒதுக்கப்படுகிறது.
மது விற்பனை அதிகமாக நடைபெறும் 10 மாநிலங்களுக்குள் தமிழ்நாடு இல்லை. மது விற்பனையில் பா.ஜ.க. ஆளும் மாநிலமான ராஜஸ்தான் முதலிடம் வகிக்கிறது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் 2006-ல் மோடி முதல்வராக இருந்தபோது வருவாய் அதிகரிக்கும் நோக்கில் வைப்ரண்ட் குஜராத் என்ற பெயரில் மது விற்பனைக்கு உரிமம் வழங்கியது.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், வெளி மாநிலையில் இருந்து வருபவர்கள் மது அருந்த அனுமதிக்கப்பட்டனர். அந்த மாநிலத்திலேயே அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு வெளிப்படத் தன்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது . மதுபான கொள்முதல் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு இருந்தால் மத்திய அரசு கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ளலாம்.
தொகுதி மறுசீராய்வினால் மக்கள் தொகை அதிக அளவில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தென் மாநிலங்களில் எம்பிக்கள் சீட்டுகள் குறைய வாய்ப்புள்ளது.
வடமாநிலங்களில் மக்கள் தொகை கணக்குப்படி எம்.பி.க்கள் சீட்டுகள் அதிகரிக்கப்படாது என சொல்ல அமித்ஷா தயாரா? வக்பு வாரிய சொத்துக்கள் அல்லாஹவுடைய சொத்துக்கள்.
அவற்றை அபரிக்கவே தற்பொழுது வக்பு வாரிய திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.