தமிழ்நாடு செய்திகள்

வருகிற ஆகஸ்டு மாதம் ராகுல்-கார்கே திருச்சி வருகிறார்கள்
- அனைத்து பகுதிகளிலும் 10 முதல் 15 பேர் கொண்ட ஒரு கமிட்டியை உருவாக்கி வருகிறார்கள்.
- இதுவரை 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசில் தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று காங்கிரசில் பலர் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கீழ்மட்டத்தில் காங்கிரசுக்கு அந்த அளவுக்கு பலம் இருக்கிறதா என்ற கேள்வியும் உள்ளது. இதை சரி கட்ட கிராம கமிட்டிகள் அமைக்கும் புதிய முயற்சியை தமிழகத்தில் காங்கிரஸ் செயல்படுத்தி வருகிறது. அதன்படி கிராமங்கள், கிராம பஞ்சாயத்துக்கள், வார்டுகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என்று அனைத்து பகுதிகளிலும் 10 முதல் 15 பேர் கொண்ட ஒரு கமிட்டியை உருவாக்கி வருகிறார்கள்.
இதுவரை 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. அதற்கு கிராம கமிட்டி அமைத்து முடிக்கும் போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கிடைப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் முகவரி, செல்போன் எண்கள், எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற அனைத்து விவரங்களும் கட்சி தலைமையிடம் இருக்கும். தேர்தல் நேரத்தில் இவர்கள் மூலம் ஆதரவு திரட்டவும், எளிதாக இருக்கும். சமீபத்தில் சென்னையில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் மேலிட பொறுப்பாளர் சோடங்கர் பேசும் போது, கூடுதல் தொகுதிகள் கேட்கலாம். அதற்கு ஏற்ப முதலில் நமது கட்சியை பலப்படுத்துவோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இன்னும் 2 மாதத்துக்குள் அப்பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளார்கள். இதைத் தொடர்ந்து வருகிற ஆகஸ்டு மாதம் திருச்சியில் ராகுல்காந்தியை அழைத்து பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளார்கள்.
இதில் மல்லிகார்ஜூன கார்கேவும் பங்கேற்கிறார். இந்த கூட்டத்திற்கு தற்போது அமைக்கப்படும் கிராம கமிட்டிகள் மூலம் ஆட்களை திரட்டவும் திட்டமிட்டு உள்ளார்கள். இது வருகிற தேர்தலில் காங்கிரசின் எழுச்சிக்கும் அந்த கூட்டணியில் கூடுதல் இடம் கேட்பதற்கு அடிப்படையாக அமையும் என்கிறார்கள்.