தமிழ்நாடு செய்திகள்

தேசியக் கொடியுடன் கோவில் கோபுரத்தில் ஏறி சமூக ஆர்வலர் திடீர் போராட்டம்
- கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலர்.
- கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
விராலிமலை:
விராலிமலை அருகே உள்ள கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலர். இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஆண்டு விராலிமலை செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் சுதந்திர தின நாளான இன்று காலை சுமார் 5 மணி அளவில் திடீரென்று அவர் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் ஏறினார்.
அங்கு நின்றவாறு கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, விராலி மலை காவல் ஆய்வாளர் லதா, இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேசி வருகிறார்கள்.