தமிழ்நாடு செய்திகள்

மேகமலை அருவியில் 50-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.30 அடியாக உள்ளது.
- சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 43.50 அடியாக உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. 40 அடி உயர பாறையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.
ஏற்கனவே அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக அருவிப்பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகள், பாதைகள், பாதுகாப்பு தடுப்புகள் சேதமடைந்து சுற்றுலாப்பயணிகள் அருவிப்பகுதிக்கு செல்வதற்கும் அருவியில் குளிப்பதற்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தடை 50ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு அருவியின் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.70 அடியாக உள்ளது. 1033 கனஅடி நீர் வருகிற நிலையில் 1600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 6798 மி. கனஅடி நீர் இருப்பு உள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 63.94 அடியாக உள்ளது. 1759 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1419 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4398 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.30 அடியாக உள்ளது. 81 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வரும் 119 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 43.50 அடியாக உள்ளது. 21 கன அடி நீர் வருகிற நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.





