மேலசொக்கநாதபுரம்:
கோடை விடுமுறை தொடங்கியுள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மலை பிரதேசங்கள், கோடை வாசஸ்தலங்கள் ஆகியவற்றை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு சுற்றுலா தலங்களில் ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவு பொதுமக்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி தேக்கடி சுற்றுலா தலத்துக்கு கோடை விடுமுறையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருவார்கள்.
அடுத்தபடியாக மூணாறு மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு கேரள அரசின் சுற்றுலாத் துறை சார்பில் கடந்த 2019ம் ஆண்டு மூணாறு-மதுரை சாலையில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் 4.5 கோடி செலவில் புதிய தாவரவியல் பூங்காவை உருவாக்கியது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை காலத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வருகின்ற மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மலர் கண்காட்சி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக ரோஜா, ஜெரோனியா, டேலியா, ஜெரிபரா, ஐஸ்வர்யா போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பூ வகைகள் சுமார் 20,000 செடிகளுக்கு மேல் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள தமிழக எல்லைப் பகுதியில் மக்களை மிரட்டி வந்த அரிக்கொம்பன் யானையை நினைவுபடுத்தும் வகையில் யானையின் உருவத்தை தத்ரூபமாக பைபர் மூலம் வடிவமைத்து அதன் அசல் செயல்பாடுகள் போலவே காதுகளையும் தும்பிக்கையையும் அசைக்குமாறு எந்திரம் மூலம் இயங்குமாறு வைக்கப்பட்டுள்ளது. தற்போதே அந்த யானை அருகில் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிதாக பல இடங்களில் வண்ண விளக்கு அலங்காரங்களுடன் இசையுடன் கூடிய நீர் அருவி செல்பி பாய்ண்டுகள், கண்ணாடி பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரளாவின் முக்கிய அடையாளங்களான அரி கொம்பன் யானை உருவம், கதகளி நாட்டிய உருவம் காட்டெருமை போன்ற உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டதுடன் மலர்கள் மற்றும் இலைகளால் டைனோசர் உருவங்கள், மர அணில்கள் உருவங்கள் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.