தமிழ்நாடு செய்திகள்

வைகை அணையின் நீர்மட்டம் சரிவு- பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
- அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால் தொடர்ந்து சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
- 58-ம் கால்வாய் பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வசதி உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே கால்வாய், மதகுகள் வழியாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 29ந் தேதி 69.46 அடியாக இருந்தது. இதனையடுத்து 58-ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடிநீர் வீதம் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாகவும், கால்வாய் வழியாகவும், தண்ணீர் வெளியேறியதால் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 66.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1402 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2299 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5063 மி.கன அடியாக உள்ளது. இதன் காரணமாக 58-ம் கால்வாய் வழியாக வெளியேறிய தண்ணீர் நின்றுபோனது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால் தொடர்ந்து சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 58-ம் கால்வாய் பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.10 அடியாக உள்ளது. வரத்து 1051 கன அடி. திறப்பு 1711 கன அடி. இருப்பு 5656 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிப்பதால் அணைக்கு வரும் 37 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
பெரியாறு அணை 9.4, உத்தமபாளையம் 3, வீரபாண்டி 2.2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.





