தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. ஆட்சி அமைந்ததும் கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: விஜய்
- கிட்னி திருட்டில் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
- குறிப்பாக விசைத்தறையில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து இந்த கிட்னி திருட்டு நடந்திருக்கிறது.
விஜய் இன்று நாமக்கலில் பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு., அதுதான் நாடறிந்த விஷயம் ஆயிற்றே. அதை ஏற்கனவே திருச்சியில் பேசியிருந்தேன். ஆனால் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக விசைத்தறையில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து இந்த கிட்னி திருட்டு நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.
இந்த விஷயத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்மளுடைய ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
இந்த கிட்னி திருட்டு எங்கிருந்து தொடங்கியது என்று பார்த்தால் கந்துவட்டி கொடுமையில் இருக்கிறது. அதாவது விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தையும் பொருளாதாரத்தையும் எந்த ஏற்றமும் இல்லாமல் செய்துள்ள இந்த மாடல் அரசு, மேம்படுத்தாத காரணத்தினால் அவர்கள் கிட்னியை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை.
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான தேர்வுகளை யோசித்து உறுதியாக தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.
இவ்வாறு விஜய் பேசினார்.