பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இவர்களின் வறுமையை தெரிந்து கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் வெளியே தெரியவந்ததும் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து சிறுநீரக மோசடியில் தொடர்புடைய புரோக்கர்கள், டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆஸ்பத்திரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சனை ஓய்ந்து இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிபாளையத்தை சேர்ந்த ஒரு பெண் தனது சிறுநீரகத்தை ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக பகீர் தகவலை வெளியிட்டார்.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் கவுசல்யா என்பது தெரியவந்தது. மேலும் அவர் புரோக்கர் ஆனந்தன் என்பவர் மூலம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரகம் எடுக்கப்பட்டதாகவும், அதற்காக தனக்கு ரூ.6 லட்சம் தந்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த விஜயா என்ற பெண்ணும் தனது சிறுநீரகத்தை ரூ.6 லட்சத்துக்கு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் திருச்சி, பெரம்பலூரில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்று ஆய்வு செய்தனர். அதில் திருச்சி ஆஸ்பத்திரியில் நடத்திய சோதனையில் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 6 பெண்களின் சிறுநீரகம் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த முகவரிக்கு வந்து ஆய்வு செய்த போது அது போலியானது என்று தெரியவந்தது.
எனவே போலி ஆவணங்கள், போலி முகவரி கொடுத்து இந்த சிறுநீரக மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. எனவே இவர்களை அழைத்து சென்ற புரோக்கர் ஆனந்தன் என்பவரை தேடி சென்ற போது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
பள்ளிபாளையம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பணத்துக்காக சிறுநீரகம் எடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விவகாரம் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. வழக்கமாக ஒருவர் சிறுநீரகம் தானம் செய்ய வேண்டும் என்றால் அவரிடம் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்பார்கள். அதற்கு ஏற்றாற் போல் சிறுநீரகம் கொடுக்கும் பெண்களை புரோக்கர்கள் தயார் செய்துஅழைத்து சென்று உள்ளனர்.
பள்ளிபாளையம் பகுதியில் இதுவரை ஏராளமான பெண்களிடம் சிறுநீரகம் எடுத்து மோசடி நடந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறையினரும், போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். புரோக்கர் ஆனந்தன் பிடிபட்டால் தான் எத்தனை பேரிடம் சிறுநீரகம் எடுக்கப்பட்டது என்ற முழுவிபரமும் தெரியவரும்.
இதற்கிடையே திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின் திட்ட இயக்குனர் வினீத், மருத்துவ சட்ட துணை இயக்குனர் மீனாட்சி சுந்தரேசன், மருத்துவ சட்ட பிரிவு டி.எஸ்.பி. சீத்தாராமன் மற்றும் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் கைப்பற்றப்பட்ட போலி ஆவணங்களில் கையெழுத்து போட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் திருச்சி, பெரம்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிந்ததும் அவர்கள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.