தமிழ்நாடு செய்திகள்

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு இன்று நடக்கிறது- துணை ஜனாதிபதி பங்கேற்பு
- நாளை ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்.
- இன்று மாலை முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.
ஊட்டி:
தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர், இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணிக்கு ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் தரையிறங்குகிறார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், இன்று மாலை 6 மணிக்கு ஊட்டி அடுத்த முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.
நாளை ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார். நாளை மறுநாள் ஊட்டியில் இருந்து துணை ஜனாதிபதி விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையத்தை சென்றடைகிறார். அதன் பின்னர், அன்று காலை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவ-மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை மார்க்கமாக நேற்று மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் வரவேற்றனர். ஆளுநர் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒத்திகை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று பாதுகாப்பு வாகன ஒத்திகை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் இறங்குதளம், துணை ஜனாதிபதி வரும் சாலை, தாவரவியல் பூங்கா ஆகிய பகுதிகள் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
நீலகிரியில் உள்ள 16 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கி இருப்பவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் தங்கி இருப்பவர்களின் முழு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.