தமிழ்நாடு செய்திகள்

தோடர் பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்த துணை ஜனாதிபதி
- துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் 3 நாட்கள் பயணமாக நீலகிரிக்கு நேற்று வந்தார்.
- தோடர் பழங்குடியின மக்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்து வரும் துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் 3 நாட்கள் பயணமாக நீலகிரிக்கு நேற்று வந்தார்.
நேற்று ஊட்டி ராஜ்பவனில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அதனை தொடர்ந்து ஊட்டி அருகே உள்ள தோடர் பழங்குடியினரின் தலைமை வசிப்பிடமான முத்தநாடு மந்துவுக்கு துணை ஜனாதிபதி சென்றார்.
அங்கு அவரை தோடரின பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்கி, பாரம்பரிய நடனமாடி வரவேற்றனர். அப்போது துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரும் தோடரின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். தொடர்ந்து அவர் தோடர் பழங்குடியின மக்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
அதன்பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் ஊட்டி ராஜ்பவன் வந்தார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்கிறார்.