உலகம்

மியான்மரில் துணிகரம்: புத்த மடாலயத்தில் நடந்த வான்வழி தாக்குதலில் 23 பேர் பலி
- மியான்மரில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வருகிறது.
- நாட்டின் பல பகுதிகளில் ராணுவத்துக்கு எதிராக பல்வேறு பிரிவினர் போராடி வருகின்றனர்.
பாங்காக்:
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வருகிறது.
நாட்டின் பல பகுதிகளில் ராணுவத்துக்கு எதிராக பல்வேறு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இந்தக் குழுக்களை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
இந்நிலையில், மியான்மரின் மத்திய பகுதியில் சகாயிங் பிராந்தியத்துக்கு உட்பட்ட லின்டாலு கிராமத்தில் உள்ள புத்த மடாலயம் ஒன்றில் நேற்று திடீரென ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் அங்கே தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் என 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த பிராந்தியத்தில் போராடி வரும் எதிர்ப்பு முன்னணிக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உயிர் பிழைப்பதற்காக ஏராளமான மக்கள் அந்த மடாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.
புத்த மடாலயத்தில் தங்கியவர்கள் மீது ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல் மியான்மர் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.