உலகம்

பஹல்காம் தாக்குதல்.. பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு
- பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார்.
- பாகிஸ்தானின் உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தங்கள் சொந்த பாதுகாப்பு தோல்விகளுக்காக இந்தியா பாகிஸ்தான் மீது பழிபோடுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
மேலும் பஹல்காம் விவகாரத்தில் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார்.
தொலைபேசி வாயிலாக இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில், பாரபட்சமற்ற விசாரணைக்கு சீனா ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இருதரப்புமே பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
பதட்டங்களை தணிக்க இரு தரப்பும் பணியாற்ற வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது அனைத்து நாடுகளின் பொறுப்பாகும். பாகிஸ்தானின் உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
இந்த மோதல் இந்தியாவிற்கோ அல்லது பாகிஸ்தானிற்கோ அடிப்படை நலன்களுக்கு உகந்ததல்ல, தெற்காசியாவின் ஸ்திரத்தன்மைக்கும் நன்மை பயக்கக் கூடியது அல்ல.
இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடித்து நிலைமையை அமைதிப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வாங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.