பைக்

ரூ. 28.99 லட்சம் விலையில் புதிய சூப்பர்பைக் அறிமுகம் செய்த ஹோண்டா
- புதிய ஹோண்டா பைக்கில் 999cc இன்லைன் 4-சிலிண்டர் மோட்டார் உள்ளது.
- இந்த யூனிட் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டாவின் முதன்மை ஸ்போர்ட் பைக் CBR1000RR-R இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் டாப் எண்ட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 28.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலின் விலையை விட சுமார் ரூ. 2.23 லட்சம் விலை அதிகம் ஆகும். இந்த பைக் புதுப்பிக்கப்பட்ட பாடிவொர்க் மற்றும் திருத்தப்பட்ட வன்பொருளைப் பெறுகிறது.
இந்த பைக்கின் முன்பக்க அமைப்பு அதன் முந்தைய மாடலை போலவே உள்ளது. இந்த பைக்கின் ஃபேரிங்கில் புதிதாக ஏரோடைனமிக் விங்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பைக் அதிவேகத்தில் செல்லும் போது டவுன்ஃபோர்ஸ் அதிகப்படுத்துகிறது.
புதிய ஹோண்டா பைக்கில் 999cc இன்லைன் 4-சிலிண்டர் மோட்டார் உள்ளது. இது 14,000rpm-இல் 214.5bhp பவர் மற்றும் 12,000rpm இல் 113Nm டார்க் உருவாக்குகிறது. இந்த செயல்திறன் முந்தைய மாடலைப் போலவே உள்ளன. இந்த யூனிட் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பை-டைரக்ஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் அக்ரபோவிக் டைட்டானியம் எக்சாஸ்ட் உள்ளது.
சஸ்பென்ஷனுக்கு ஒலின்ஸ் யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள் மற்றும் பின்புற மோனோஷாக் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டும் மின்னணு முறையில் சரிசெய்யக்கூடியவை. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் டூயல் 330mm டிஸ்க், பின்புறத்தில் 220mm ஒற்றை டிஸ்க் பெற்றிருக்கிறது.
எலெக்ட்ரானிக்ஸ்-ஐ பொருத்தவரை 5 லெவல் பவர் மோட்கள், 9 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், 3-லெவல் எஞ்சின் பிரேக் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளன.