கார்

முற்றிலும் புது GLC எலெக்ட்ரிக் கார்... மிரட்டிவிட்ட மெர்சிடிஸ் பென்ஸ்
- மெர்சிடிஸ் பென்ஸ்-இன் எலெக்ட்ரிக் GLC-இன் உள்புறம் புதிய MBUX ஹைப்பர்ஸ்கிரீன் உள்ளது.
- இது மேட்ரிக்ஸ் பேக்லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
புதிய மின்சார மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல் 2027ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். முதற்கட்டமாக, இந்த மாடல் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட CBU வடிவில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெறும் மின்மயமாக்கப்பட்ட மாடல்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் GLC பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக்-ஃபர்ஸ்ட் தளத்தின் அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் டூயல்-மோட்டார் டிரைவ் டிரெய்ன் கொண்டிருக்கிறது.
மிகவும் விலையுயர்ந்த மாடலாக GLC 400 4MATIC இருக்கும். இதில் உள்ள இரண்டு மோட்டார்கள் 360kW டார்க் உற்பத்தி செய்கிறது. பின்புற மோட்டார் 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் முன்புற ஆக்சிலில் டிஸ்கனெக்ட் யூனிட் கொண்டுள்ளது. இது நிலைமைகள் அனுமதிக்கும் போதெல்லாம் துண்டிக்க முடியும், இதன் மூலம் செயல்திறன் அதிகரிக்கும்.
இந்த யூனிட் மணிக்கு 0-100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.3 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த காரில் புதிய 94kWh லித்தியம்-அயன் பேட்டரி யூனிட் உள்ளது. புதிய 800-வோல்ட் மின் கட்டமைப்போடு இணைந்து, இந்த பேட்டரி 571 முதல் 713 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்று WLTP சோதனைகளில் தெரியவந்துள்ளது. இத்துடன் 330kW வரை அதிவேக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ்-இன் எலெக்ட்ரிக் GLC-இன் உள்புறம் புதிய MBUX ஹைப்பர்ஸ்கிரீன் உள்ளது. இது ஒரு ஆப்ஷனாக கிடைக்கிறது. இதில் 39.1 இன்ச் அளவில் டேஷ்போர்டு முழுக்க நீள்கிறது. இது மெர்சிடிஸ் பென்ஸில் இதுவரை நிறுவப்பட்ட மிகப்பெரிய ஸ்கிரீனாக அமைகிறது. இது மேட்ரிக்ஸ் பேக்லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
பவர்டிரெய்ன் மற்றும் டிஜிட்டல் இன்டீரியர் இரண்டிற்கும் அடித்தளமாக இருப்பது, GLC-இன் இந்த தலைமுறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய எலெக்ட்ரிக்-ஃபர்ஸ்ட் பிளாட்ஃபார்ம் ஆகும். இந்த கார் அளவீடுகளில் 4,845 மில்லிமீட்டர் நீளம் மற்றும் 2,972 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த காரில் முன் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு கால் வைக்க அதிக இடவசதி உள்ளது. மேலும் அதிக ஹெட்ரூம் உள்ளது.
புதிய எலெக்ட்ரிக் GLC-இன் உற்பத்தி ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸ் பிரெமன் ஆலையில், வழக்கமான முறையில் இயங்கும் வேரியண்ட்களுடன், நிகர கார்பன்-நடுநிலை அடிப்படையில் நடைபெறும்.