கார்

480கிமீ ரேஞ்ச் வழங்கும் புது எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த வால்வோ... விலை தான் ஹைலைட்..!
- வால்வோ நிறுவனம் இதுவரை தயாரித்த மின்சார கார்களில் மிக சிறிய மாடலாக EX30 அமைந்துள்ளது.
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர்கள் (WLTP) வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
வால்வோ இந்தியா நிறுவனம் தனது மிகவும் மலிவு விலை கார்: EX30-ஐ ரூ.41 லட்சம் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் இந்த புதிய EV-யை அக்டோபர் 19ஆம் தேதி வரை ரூ.39.99 லட்சத்திற்கு முன்பதிவு செய்து வாங்கலாம். டெலிவரி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்திற்கு EX30 மாடல் திருப்புமுனையாக இருக்கலாம். ரூ. 40 லட்சத்திற்கும் குறைவான விலையில் (முன்கூட்டிய இருப்பு விலை), இந்த மாடல் கச்சிதமான இடத்தில் அமர்ந்திருக்கிறது. வால்வோ EX40 மற்றும் EC40 மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ள EX30, நன்கு கட்டமைக்கப்பட்ட மின்சார காரை தேடும் இளம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.
வால்வோ நிறுவனம் இதுவரை தயாரித்த மின்சார கார்களில் மிக சிறிய மாடலாக EX30 அமைந்துள்ளது. இந்த கார் பெங்களூரு அருகில் உள்ள வால்வோ நிறுவனத்தின் ஹோஸ்கோட் ஆலையில் உள்ளூரில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்த மின்சார காரில் 69kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர்கள் (WLTP) வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
இதன் ஒற்றை-மோட்டார், ரியர்-வீல் டிரைவ் செட்டப் 272bhp பவர், 343Nm நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்கிறது. இத்துடன் 12.3-இன்ச் டச்-ஸ்கிரீன், 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய 1040 வாட்ஸ் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் கீ பிளஸ் மற்றும் NFC ஸ்மார்ட் கார்டு, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் தீம்கள் இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
புதிய வால்வோ EX30 மாடலில் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா மற்றும் இன்டர்செக்ஷன் ஆட்டோ-பிரேக் போன்ற ADAS அம்சங்களையும் பெறுகிறது. இந்த கார் மாடலுக்கு வால்வோ நிறுவனம் மூன்று ஆண்டுகள் வாரண்டி, RSA தொகுப்பை வழங்குகிறது. இத்துடன் எட்டு ஆண்டுகள் பேட்டரி வாரண்டி பேக்கேஜ் மற்றும் வால் பாக்ஸ் சார்ஜர் ஆகியவையும் உள்ளன.