சினிமா செய்திகள்

`நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் அவர்தான்' - SK குறித்து எமோஷனலாக பேசிய அனிருத்
- இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மதராஸி'.
- ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'மதராஸி' வருகிற 5-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'மதராஸி' வருகிற 5-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது:-
"என்னுடைய இசையில் முதலில் பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவானது எதிர் நீச்சல் திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் இருந்து சிவகார்த்திகேயனும் எனக்கு இடையேயான நட்பு தொடங்கியது.
நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் அவர்தான், எஸ்.கே என்னுடைய செல்லம். இது நாங்க சேரும் ஒன்பதாவது படம். அவர் மனசு சுத்தமா இருக்கிறதுதான் அவர் இன்னைக்கு இங்க இருக்குறதுக்கு காரணம். 50, 100னு இப்போ 300 கோடி வசூல் அடிச்சுட்டாரு.
'மதராஸி' படத்துல வேற ஒரு எஸ்.கே.வ நீங்க பார்ப்பீங்க. டிரெய்லர்ல 'இது என் ஊருடா, நான் நிப்பேன்'னு சொல்வாரு. அது மாதிரி இது என் எஸ்.கே, நான் வந்து நிப்பேன். நானும் எஸ்.கே.வும் சேர்ந்து ஒரே சமயத்துல கரியரை தொடங்கினதுனால அது எனக்கு பர்சனலான உறவு. என்னைக்கோ ஒரு நாள் நான் Field Out ஆவேன். அன்னைக்கு எஸ்.கே.வின் வெற்றியை எண்ணி நான் சந்தோஷப்படுவேன்." என மிகவும் எமோஷனலாக கூறினார்.