சினிமா செய்திகள்

'பான் இந்தியா' படங்கள் என்பது ஒரு மிகப்பெரிய மோசடி - இயக்குநர் அனுராக் காஷ்யப் ஒரே போடு!
- கதைசொல்லலில் சரிவு அங்குதான் தொடங்குகிறது.
- இந்தித் திரைப்படத் துறையில் பணி கலாச்சாரம் பிடிக்காததால் பாலிவுட்டை விட்டு வெளியேறுவதாக அவர் அறிவித்தார்.
பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் பான் இந்தியா படங்கள் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்தித் திரைப்படத் துறையில் பணி கலாச்சாரம் பிடிக்காததால் பாலிவுட்டை விட்டு வெளியேறுவதாக அவர் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்தார்.
அப்போது பான் இந்தியா படங்கள் குறித்து பேசிய அனுராக் காஷ்யப், "என் கருத்துப்படி, பான்-இந்தியா ஒரு மிகப்பெரிய மோசடி. ஒரு படத்தை உருவாக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும். பலர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அந்தப் படத்தைச் சார்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கை முறையும் அதைப் பொறுத்தது. ஒரு படத்திற்காகச் செலவிடப்படும் பணம் முழுவதும் படத்தைத் தயாரிப்பதற்குச் செல்வதில்லை.
அப்படிச் செய்தாலும், அது பெரும்பாலும் மிகப்பெரிய, யதார்த்தமற்ற செட்களில் செலவிடப்படுகிறது. இதில் எந்த அர்த்தமும் இல்லை. இதுபோன்ற படங்களில் 1 சதவீதம் மட்டுமே வெற்றி பெறுகிறது" என்று கூறினார்.
மேலும் வெற்றிபெற்ற படங்களைப் பின்பற்றும் போக்கு குறித்து பேசிய அவர், 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' வெற்றிக்குப் பிறகு, எல்லோரும் தேசபக்தி படங்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.
'பாகுபலி'க்குப் பிறகு, எல்லோரும் பிரபாஸையோ அல்லது வேறு யாரையாவது வைத்து பெரிய படங்களைத் தயாரிக்க விரும்பினர். 'கேஜிஎஃப்' வெற்றி பெற்றபோது, எல்லோரும் அதைப் பின்பற்ற விரும்பினர். கதைசொல்லலில் சரிவு அங்குதான் தொடங்குகிறது" என்று தெரிவித்தார்.