OTT

அனுஷ்கா நடிப்பில் வெளியான 'காட்டி' முதல் இந்த வார OTT ரிலீஸ் (26.09.2025)
- அனுஷ்கா நடிப்பில் க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'காட்டி'.
- நடிகர் மோகன்லாலின் 'ஹிருதயபூர்வம்' ஓணம் பண்டிகையையொட்டி வெளியானது.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
காட்டி
அனுஷ்கா நடிப்பில் க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'காட்டி'. இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோயினாக சோலோவாக அனுஷ்கா களமிறங்கினார். இப்படம் வெளிவந்து எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில் நாளை ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
சுமதி வளவு
கடந்த மாதம் 1 -ம் தேதி திரைக்கு வந்த சுமதி வளவு, மந்தமான விமர்சனங்களை பெற்ற போதிலும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படம் நாளை முதல் ஜீ5 தளத்தில் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
ஹிருதயபூர்வம்
நடிகர் மோகன்லாலின் 'ஹிருதயபூர்வம்' ஓணம் பண்டிகையையொட்டி வெளியானது. இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்ததாக படக்குழு தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இப்படம் நாளை வெளியாக உள்ளது.
ஓடும் குதிர சாடும் குதிர
பகத் பாசில், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான மலையாள சினிமா. மரச்சாமான்கள் விற்கும் கடைக்காராக நாயகன் இருக்கிறார். நண்பருடன் இணைந்து ஒரு வீட்டிற்கு மரச்சாமான்கள் இறக்கி வைக்க செல்கிறார். அங்கு காதல் தோல்வியில் இருந்து மீண்டு வரும் நாயகியுடன் காதலில் விழுகிறார். நாயகனின் அர்ப்பணிப்பை கண்டு நாயகியும் காதல் கொள்கிறார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமணத்தன்று தனது கணவர் குதிரையில் வந்து இறங்கவேண்டும் என்ற ஆசையை நாயகி கொண்டிருக்கிறார். நாயகியின் ஆசையை நிறைவேற்ற திருமணநாளில் நாயகன் குதிரையில் செல்ல விபத்தில் காயமடைந்து 'கோமா' நிலைக்கு செல்கிறார். அதன்பின்னர் நாயகன்-நாயகியின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகள் தொடர்பான நகைச்சுவை சினிமா. நெட்பிளிக்சில் நாளை வெளியாகிற இதனை தமிழில் காணலாம்.
மகா அவதார் நரசிம்மா
கே.ஜி.எப்., காந்தாரா போன்ற பிரமாண்ட படங்களை தயாரித்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே. தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் இதிகாச கதைகளை மையமாக வைத்து கார்ட்டூன் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் முதலாவதாக அரக்கன் இரண்யகசிபு மகன் பக்தன் பிரகலாதன் மற்றும் விஷ்ணு அவதாரங்களில் ஒன்றான நரசிம்மாவின் கதையை தழுவி கார்ட்டூன் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. அஸ்வின் குமார் இயக்கத்தில், சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரூ.320 கோடி வசூல் குவித்து இந்தியாவில் வெளியான கார்ட்டூன் படங்களிலேயே அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையை பிடித்துள்ளது. தற்போது நெட்பிளிக்சில் வெளியாகி உள்ள இதனை தமிழில் காணலாம்.
மதராஸி
சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் நடிப்பில் வெளியான படம். வட இந்தியாவில் துப்பாக்கிகளை தயாரித்து சென்னைக்கு கள்ளத்தனமாக கடத்த வில்லன் முயற்சிக்கிறார். இதுகுறித்து தகவலறியும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இதனை தடுக்கும் முயற்சி எடுக்கிறார்கள். லஞ்சம், ஊழல் மற்றும் சூழ்ச்சியால் தோல்வியை தழுவுகிறார்கள். ஆனால் நேர்மையான அதிகாரியோ, அநியாயத்தை கண்டு பொங்கும் நாயகனை கொண்டு இதனை தடுக்க நினைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் வில்லன் கும்பல் நாயகிகனின் காதலியை கடத்த அதன்பின்னர் நாயகன் மற்றும் வில்லனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் தொடர்பான சினிமா. அனிருத் இசையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம். அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வருகிற 3-ந்தேதி வெளியாகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் நாளை வெளியாக உள்ளது.