வழிபாடு

கருட பஞ்சமி வழிபாடும் பலன்களும்
- பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.
- புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.
அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதியான அன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது.
எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும். மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். கருடன், மகா பலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.
மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட சிறந்த நாள் நாக/கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.
அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக பால் கொழுக்கட்டை, பால் பாயாசம் செய்து வழிபடலாம். அம்பிகையின் ஸ்தோத்திரங்கள், அபிராமி அந்தாதி பாடி வழிபட வேண்டும்.
கருட பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.
நாக தோஷத்தை நீக்கக்கூடிய நாளாக நாக சதுர்த்தி, கருட பஞ்சமி அமைகிறது. மீள முடியாத வினைப்பயனில் இருந்து விடுபட சர்ப்ப வழிபாட்டையும், கருட வழிபாட்டையும் ஜோதிட முன்னோடிகள் வலியுறுத்துகின்றனர். சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இன்னல்களை நீக்கும் வலிமை கருட பகவானுக்கு உண்டு.
கருட பஞ்சமியன்று அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவானையும் பெருமாளையும் வழிபட்டு வர நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.