வழிபாடு

அபரஞ்சி தங்கத்தால் செய்த கள்ளழகர் சிலை
- பத்தரை மாற்று தங்கம் என்பது பத்து பங்கு தங்கம், அரை பங்கு செம்பு கலந்தது.
- அபரஞ்சி தங்கத்தை பற்றி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ராமாயண பாடல்களை இயற்றியபோது, கம்பர் ஓர் இடத்தில் அதிக தயக்கம் கொண்டார் என கூறுவது உண்டு.
ராமர் பிறந்ததும் அவரது முகத்தின் பிரகாசத்தை எதனோடு ஒப்பிடுவது என்று கம்பருக்கு தயக்கம் ஏற்பட்டதாம். அதாவது, பிரகாசமான எதனோடு ஒப்பிட்டாலும், அது ராமரின் முக அழகுக்கு ஈடாகாது என்பதால் கம்பர் தயங்கியதாக இலக்கிய ஆர்வலர்கள் கூறுவது உண்டு.
கள்ளழகரின் சிலையை பொன்னால் வடிவமைக்க நினைத்தவர்களுக்கும் அதுபோன்ற தயக்கம் ஏற்பட்டது போலும். எத்தகைய பொன்னாக இருந்தாலும், அது அழகருக்கு ஈடாகாது என எண்ணி உள்ளனர்.
பத்தரை மாற்று தங்கம், பத்து மாற்று தங்கம் என்றெல்லாம் சொல்லப்படுவது உண்டு.
பத்தரை மாற்று தங்கம் என்பது பத்து பங்கு தங்கம், அரை பங்கு செம்பு கலந்தது. பத்துமாற்று தங்கம் என்பது செம்பு கலக்காத சொக்கத்தங்கம். ஆனால், அதைவிடவும் கூடுதல் சிறப்பு கொண்ட தங்கத்தில் அழகரின் விக்ரகத்தை உருவாக்க வேண்டும் என பழங்காலத்திலேயே முடிவு செய்து அலசி ஆராய்ந்துள்ளனர்.
அப்படி தேடியபோது அவர்களுக்கு அபரஞ்சி தங்கம் பற்றி தெரியவந்துள்ளது. அகராதியில் அபரஞ்சி தங்கம் என்றால் என்ன என்று நாம் தேடினால் 'புடமிட்ட பொன்' என பொருள் கிடைக்கிறது.
அதாவது, சொக்கத்தங்கத்தைவிட இன்னும் தூய்மை கொண்டதாக சொல்கிறார்கள்.
அழகர்கோவிலின் மூலவர் சுந்தரராஜ பெருமாள். உற்சவர் கள்ளழகர். இதில் அழகர் என்றால் அழகில் சொக்க வைப்பவர். அப்படிப்பட்ட அழகரை கண்டதும் பக்தர்களை தானாக ஈர்க்கும் வகையில் அவரது சிலை அமைய வேண்டும் என்பதற்காக அபரஞ்சி தங்கத்தை பயன்படுத்தி மிகவும் கண்ணும் கருத்துமாக இந்த சிலையை உருவாக்கி இருக்கிறார்கள். அபரஞ்சி தங்கத்தை பற்றி தமிழ் இலக்கியத்திலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
திருக்குற்றாலக் குறவஞ்சி, அபரஞ்சி தங்கத்தை குறவஞ்சியின் மேனிக்கு உவமையாக பாடியுள்ளது.
"வஞ்சி எழில்அபரஞ்சி வரிவிழி நஞ்சி". -இதுதான் அந்த பாடல்வரி.
இதற்கு உரை எழுதிய தமிழ் அறிஞர்கள், அபரஞ்சி என்பதை வார்த்துவிட்ட பொன் என்றும், அத்தகையை மேனி பொலிவை உடையவள் குறவஞ்சி எனவும் கூறுகிறார்கள்.
அபரஞ்சி தங்கத்தால் செய்த 2 சிலைகள்தான் உள்ளதாக அழகர்கோவில் பட்டர்கள் கூறுகிறார்கள்.
அதில் ஒன்று கள்ளழகர் சிலை என்றும், மற்றொன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் உள்ள சிலை எனவும் தெரிவித்தனர்.
மேலும், அழகர் விக்ரகத்துக்கு அழகர் மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் சிலை கருத்து விடக்கூடும் என்றும் தெரிவித்தனர்.