வழிபாடு

சித்திரை திருவிழாவில் நடக்கும் வைபவங்கள் என்னென்ன?
- அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம்.
- சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் 8-ந்தேதி நடைபெறுகிறது.
மதுரை பாண்டிய மன்னனுக்கு மீனாட்சி மகளாக பிறந்து, பட்டத்து அரசியாக மகுடம் சூடி, தேவா்களை போரில் வென்று, கடைசியாக சிவபெருமானை போருக்கு அழைத்து பின்னர் அவரையே மணம் புரிந்தார்.
மதுரையை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த விழாவை பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு சித்திரை திருவிழா நாளை மறுநாள் (29-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி-சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். எனவே ஒவ்வொரு நாளும் மக்கள் பெருந்திரளாக கூடி தரிசிப்பார்கள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் பல உள்ளன. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் வைபவம் மே 6-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறு கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோல் வழங்குவார்கள். அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனுடன் அம்மன் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் 8-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த விழாவை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருவார்கள். அதே போன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து தெய்வானை, முருகப்பெருமானும், பவளகனிவாய் பெருமாளும் வந்து பங்கேற்பார்கள். மறுநாள் (9-ந்தேதி) மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து அழகர்கோவிலில் நடக்கும் சித்திரை விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 10-ந்தேதி அழகர் கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ மதுரையை நோக்கி அழகர் அதிர்வேட்டுகள் முழங்க புறப்படுகிறார். 18 கி.மீ. தூரம் வரும் அவர், வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
11-ந்தேதி மூன்று மாவடியில் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடக்கிறது. 12-ந்தேதி விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், கள்ளழகர் தங்கக்குதிரையில் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்குகிறார். ராமராயர் மண்டபத்தில் அவரை குளிர்விக்க தீர்த்தவாரியும் நடக்கிறது. அடுத்த நாள் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். பின்னர் தசாவதாரங்களில் காட்சி அளிக்கிறார். பூப்பல்லக்கில் தல்லாகுளத்தில் பவனி வருவார். 15-ந்தேதி மலைக்கு புறப்படுகிறார்.