பொது மருத்துவம்

மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்!
- நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும்.
- நெஞ்சின் இடப்பகுதி பாரமாக இருக்கும்.
'இடதுபக்க நெஞ்சுவலி என்றதுமே, நாம் முதலில் நினைத்து மிகவும் பயப்படுவது 'மாரடைப்பு' அதாவது 'ஹார்ட் அட்டாக்' தான். கொஞ்சமாக நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும்.
நெஞ்சின் இடதுபக்கம் கனமாக, பாரமாக, இறுக்கமாக இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. அவை: இதயம், நுரையீரல், நெஞ்சிலுள்ள தசைப்பிரச்சினைகள், ஜீரணக்கோளாறு, மன நல பிரச்சினைகள், விலா எலும்பு நோய், அதிக அளவில் வாயு சேருதல், ஆஸ்துமா, நிமோனியா போன்ற பல காரணங்களைச் சொல்லலாம்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்றால், நெஞ்சின் இடப்பகுதி பாரமாக இருக்கும். இடது தோள்பட்டை வலிக்கும், இடது கை, இடது கைவிரல்கள் வரை வலி பரவும், உடம்பெல்லாம் மிக அதிகமாக வியர்த்துக் கொட்டும். தலை லேசாக வலிக்கும், வாந்தி வருவது போன்று இருக்கும், இதயத் துடிப்பு மிக அதிகமாக துடிக்கும்.
மூச்சு வாங்கும், இதயத்துக்கு நேராக பின்பக்க முதுகில் வலி, நெஞ்சைச் சுற்றி கயிற்றைக் கட்டி இறுக்குவது போன்றதொரு உணர்வு ஏற்படும். இதுபோன்ற மாரடைப்புக்கான அறிகுறிகளில் சில உங்களுக்கு ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும்.
வாய்வுக்கோளாறு தான் நெஞ்சுவலியை ஏற்படுத்துகிறது என்று முடிவுசெய்து அதற்குண்டான வீட்டு வைத்தியம், மருந்துக் கடையில் நீங்களே மருந்தை வாங்கி சாப்பிடுவது போன்றவை மிகப்பெரிய தவறாகும்.
மேலும், அதிக காரம், கொழுப்பு, மசாலா நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது நெஞ்செரிச்சலை உண்டுபண்ணும். இதுவே நெஞ்சு வலி வந்துவிட்டதோ என்ற பயத்தை உண்டாக்கும். எனவே இவைகளை குறையுங்கள்.
மது, புகைப்பழக்கம் கூடாது. ஆஸ்துமா இருப்பவர்கள் அதை தூண்டிவிடும் பொருட்கள், உணவுகளிடமிருந்து விலகி இருங்கள்.
உங்களுக்கு இதயப் பிரச்சனையைவிட, மனப்பயம் தான் அதிகமாக இருக்கிறது. வீடு, அலுவலகம், தொழில் போன்ற பிரச்சனைகளால் டென்ஷனாகும் போது சிலருக்கு நெஞ்சுவலி வரலாம். முதலில் மன தைரியம் வேண்டும். நெஞ்சுவலி வந்தால், உடனே அருகிலுள்ள இதய நோய் சிகிச்சை நிபுணரை சந்திக்க வேண்டும்.