அழகுக் குறிப்புகள்

கல்லூரி மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அழகு டிப்ஸ்கள்...
- சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை.
- தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும்.
கல்லூரி மாணவிகள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவே அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பலரும் அது குறித்த விழிப்புணர்வு பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். தோழிகளிடம் கேட்பது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றை பார்த்து, அவற்றை பின்பற்றி சில மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர். எனவே இந்த பிரச்சினையை தவிர்க்க, நீங்கள் பார்ப்பதற்கு அழகாக தோன்ற, உங்களுக்கு உதவும் சில எளிய குறிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
* சரும பராமரிப்பு
சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை. உங்களது சரும வகைக்கு ஏற்ப கிளென்சரனை தேர்ந்தெடுத்து, ஒரு பருத்தி உருண்டையில் கிளென்சரனை தடவி இரவு தூங்கும் முன்பு உங்களது முகத்தில் தடவ வேண்டும். இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றி விடும். அடுத்ததாக, சரும பொலிவை மேம்படுத்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தை இளமையாக வைக்க உதவும்.
* தலைமுடி பராமரிப்பு
தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு கண்டிப்பாக குளிக்க வேண்டும். முக்கியமாக உங்கள் தலைமுடிக்கு ஏற்ப கண்டிஷனரை பயன்படுத்த மறக்காதீர்கள். மேலும் வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தலைக்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.
* சூரிய ஒளி
சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சன் ஸ்கிரீன் புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து உங்களது சருமத்தை பாதுகாக்கும்.
* முக அழகு
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சிறிதளவு பாலுடன், மஞ்சள் தூள், கடலை மாவு கலந்து அதை உங்களது முகத்தில் தடவி 'ஸ்கிராப்' செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்களது முகம் பொலிவாக மாறும்.
* உடல் பராமரிப்பு
கல்லூரிக்கு சென்று வந்தவுடன் கண்டிப்பாக குளிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் இருக்கும் அழுக்கு, தூசி மற்றும் வியர்வை வெளியேற்றப்படும். உடலுக்கு நீங்கள் லேசான சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தலாம். தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் முன் என இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும் மற்றும் நாக்கையும் சுத்தம் செய்ய மறக்காதீர்கள். அப்போதுதான் பேசும்போது துர்நாற்றம் அடிக்காது. நகங்களை அவ்வப்போது வெட்டி விடுங்கள் மற்றும் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* சிம்பிள் மேக்கப்
தினமும் கல்லூரிக்கு செல்லும்போது உங்களது சரும நிறத்திற்கு ஏற்ப சிம்பிளான மேக்கப் போட்டு செல்லுங்கள். அதாவது ஐஷாடோ, ஐ லைனர், மஸ்காரா, லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதுபோல இரவு தூங்கும் முன் மேக்கப்பை அகற்ற மறக்காதீர்கள்.