பெண்கள் உலகம்

பிரிட்ஜ் வாங்கப்போறீங்களா...? நீங்கள் கவனிக்க வேண்டியவை...
- பிரிட்ஜ் சாதனத்தில் இப்போது நிறைய வசதிகள் கிடைக்கின்றன.
- பெரும்பாலான பிரிட்ஜ்கள், சத்தமில்லாத செயல்பாட்டுடன் தான் வருகின்றன.
வீட்டிற்கான அத்தியாவசிய மின்னணு சாதனங்களில் பிரிட்ஜ் எனப்படும் குளிர்சாதன பெட்டியும் ஒன்று. அத்தகைய பிரிட்ஜ் சாதனத்தை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், இதையும் கொஞ்சம் கவனத்தில் வையுங்கள். அவை இதோ...
* குடும்ப அளவு
உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், பிரிட்ஜை எந்தளவிற்கு பயன்படுத்த இருக்கிறோம் என்பதை பொறுத்து குளிர்சாதனப் பெட்டியின் அளவை தேர்ந்தெடுக்கவும். சிறிய குடும்பங்களுக்கு 180 லிட்டர் என்கிற அளவே போதுமானதாக இருக்கும். பெரிய குடும்பங்கள் 250 லிட்டருக்கு மேலாக இருக்கும் பிரிட்ஜை தேர்வு செய்யலாம்.
* பிரிட்ஜ் வகை
நேரடி குளிரூட்டல் (direct cool), உறைபனி இல்லாத குளிரூட்டல் (frost-free), இரட்டை கதவு (double door), மூன்று கதவு (triple door), சைட் பை சைட் (side by side) என பிரிட்ஜில் பல வகைகள் உள்ளன. உங்கள் தேவைக்கேற்ப இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
நேரடி குளிரூட்டல் வகை பிரிட்ஜின் பிரீசர் பாக்ஸ் அடிக்கடி பனிக்கட்டியால் நிரம்பிவிடும். அதை நாம்தான் உருக வைக்கவேண்டும். ஆனால் இந்த பிரச்சனை, நேரடி குளிரூட்டல் பிரிட்ஜை தவிர்த்து மற்ற பிரிட்ஜ் வகைகளில் இருக்காது. சில பிரிட்ஜ்களில், இப்போது பிரீசர் பாக்ஸை இயல்பான பிரிட்ஜ் போலவே பராமரிக்கும் முறைகளும் வந்துவிட்டன. அதனால், பிரிட்ஜ் வகைகளை தேர்ந்தெடுக்கையில், கொஞ்சம் கவனமாக இருங்கள்.
* சேமிப்பு
குறைந்த ஆற்றல் திறனில் (energy efficient) பிரிட்ஜை குளிரூட்டும் மாடல்களை தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் இந்த வகை மாடல்களை வாங்குவது மின்சார கட்டணத்தை சேமிக்க உதவும். அதனால் ஸ்டார் ரேட்டிங் அதிகமாக உள்ள மாடல்களை தேர்ந்தெடுங்கள்.
* அளவு
பிரிட்ஜ், பெரும்பாலும் சமையல் அறையை அலங்கரிக்கும் சாதனம். சமையலுக்கு தேவையான பொருட்கள் நிரம்பி இருக்கும் இடம். ஆனால் சில வீடுகளில் சமையல் அறையில் போதிய இட வசதியில்லாத காரணத்தாலும், சமையல் அறைக்கு ஏற்ற அளவுகளில் பிரிட்ஜை தேர்ந்தெடுக்காததாலும் பிரிட்ஜை வரவேற்பு அறையிலேயே வைத்திருப்பார்கள். அத்தகைய சூழலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, சமையல் அறையில் பொருந்தக்கூடிய பிரிட்ஜை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.
* வசதி
பிரிட்ஜ் சாதனத்தில் இப்போது நிறைய வசதிகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு, பிரிட்ஜிற்குள் தண்ணீரை சேமித்து வெளிபுறம் தண்ணீர் பிடிக்கும் வகையிலான டிஸ்பென்சர் வசதி, ஐஸ் கட்டிகளை வெளியிலேயே பெறும் வசதி, பிரிட்ஜின் தகவல்களை டிஜிட்டல் டிஸ்பிளேவில் அறிந்து கொள்ளும் வசதி என ஏராளமான வசதிகள் வந்துவிட்டன. அதனால், உங்களுக்கு தேவையான வசதிகள் இருக்கும்படி, பிரிட்ஜை தேர்வு செய்யுங்கள்.
* சத்தம்
இப்போது பெரும்பாலான பிரிட்ஜ்கள், சத்தமில்லாத செயல்பாட்டுடன் தான் வருகின்றன. இயல்பான சத்தமும் இல்லாத பிரிட்ஜ் வகைகள் கூட, சந்தையில் கிடைக்கின்றன. அதனால், அதிலும் கவனம் செலுத்துங்கள்.