பெண்கள் உலகம்

நைட் ஷிப்ட் வேலை... பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
- தூக்க-விழிப்பு சுழற்சிகள் சூரிய ஒளியை சார்ந்திருக்கின்றன.
- மனித உடல் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும் உயிரியல் கடிகாரத்தை அடிப்படையாக கொண்டது.
இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இரவு பணி என்றால் ஆண்கள்தான் செய்வார்கள் என்ற நிலை மாறி இரவிலும் பெண்கள் வேலை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஐ.டி. துறையை கடந்து பல இடங்களிலும் இரவு பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரவு பணி பெண்களுக்கு சாதகமானதா? என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக அமைந்திருக்கிறது. இரவு பணியை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்? என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து பார்ப்போம்.
இரவு வேலை செய்தால் என்ன நடக்கும்?
தூக்க-விழிப்பு சுழற்சிகள் சூரிய ஒளியை சார்ந்திருக்கின்றன. காலையில் சூரிய கதிர்களோ, அதன் வெளிச்சமோ உடலில் படும்போது கார்டிசோல் அளவுகள் உயர்ந்து, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடலை உற்சாகப்படுத்தும். மறுபுறம் இரவில் இருள் சூழ தொடங்கியதும் மெலடோனின் ஹார்மோன் தூக்கத்திற்கு உடலை தயார்படுத்தும். பெண்கள் இரவு நேர வேலைகளில் ஈடுபடுவது கார்டிசோலை தூண்டிவிடுவதோடு மெலடோனின் உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.
இரவு நேர வேலை செய்பவர்களுக்கு கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகமாவதாகவும், மெலடோனின் அளவு குறைவதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதிலும் பெண்கள் இரவு முழுவதும் வேலை செய்யும் வழக்கத்தை தொடரும்போது தூக்க-விழிப்பு சுழற்சியை தொந்தரவு செய்யும். உடலில் கார்டிசோல் அளவு அதிகரிப்பதற்கு வழிவகுத்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்துடன் ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். சுவாசக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
சமீபத்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 'இரவு பணியில் ஈடுபடும் பெண்களுக்கு மிதமாகவோ அல்லது கடுமையாகவோ ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
தூக்க சுழற்சி சீர்குலையும்
இரவு பணியில் ஈடுபடுவது ஆரம்பத்தில் சிரமமாக தோன்றும். நாளடைவில் அதற்கு உடல் பழக்கமாகிவிடும் என்று பலரும் கூறுவதுண்டு. இரவுப்பணியில் ஈடுபடுபவர்களின் கருத்தும் அதுவாகவே இருக்கும். பெண்களை பொறுத்தவரை இரவுப்பணியில் ஈடுபடுவது இயற்கையான தூக்க சுழற்சியை கடுமையாக சீர்குலைத்துவிடும். ஆரம்பத்தில் சமாளிக்கக்கூடிய விஷயமாக தோன்றலாம். ஹார்மோன் சமநிலையின்மைக்கும் வழிவகுத்துவிடும். வேறு சில உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடும்.
மனித உடல் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும் உயிரியல் கடிகாரத்தை அடிப்படையாக கொண்டது. பூமியின் இரவு, பகல் சுழற்சிக்கு ஏற்ப உடலும் தூக்க சுழற்சியை சீராக பராமரிக்கும். கார்டிசோல், மெலடோனின் ஆகிய இரண்டும் முக்கியமான தூக்க ஹார்மோன்களாகும். இதில் விழிப்பு நிலைக்கு தூண்டி, தூக்கத்தில் இருந்து எழுப்பும் பணியை கார்டிசோல் ஹார்மோன் செய்யும். இருள் சூழ தொடங்கியதும் உறக்க நிலைக்கு அழைத்து செல்லும் பணியை மெலடோனின் ஹார்மோன் மேற்கொள்ளும்.