பெண்கள் உலகம்

உடல் பருமனால் பாலியல் உறவில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை
- கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும்.
உடல் பருமனாக இருக்கும் பெண்கள் நிறைய பேருக்கு, பாலியல் உறவின்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையால் அதிகமாக பாலியல் உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
கருத்தரிப்பதற்கு தாம்பத்திய உறவு சரியாக இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் ஏற்படும்.
அவர்களுக்கு உடல் பருமனை பற்றிய தாழ்வு மனப்பான்மை இருப்பதால், அவர்களுக்குள் ஒரு எதிர்மறை உணர்வு உருவாகும் நிலையில், கண்டிப்பாக தாம்பத்திய உறவில் பிரச்சனை வரும். அப்படி இருக்கும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவாகும். மேலும் நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்துதல், மன அழுத்தத்தை உருவாக்குதல் ஆகியவையும் கருத்தரிப்பதை பாதிக்கும்.
இவை தவிர உடல் பருமனால் பல பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான பாதிப்பு சர்க்கரை வியாதி. ஏனென்றால் கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு குளுக்கோஸ் தன்மையில் மாறுபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வருவதால், பல நேரங்களில் இந்த பெண்களுக்கு கருத்தரிப்பதிலும் பிரச்சனை வரும், ஒருவேளை கருத்தரித்தால்கூட, கரு வளரும்போதும் பிரச்சனை வரும். மேலும் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இந்த பெண்களுக்கு முட்டைகளின் தரம் குறைவாகும்.
ஏனென்றால் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவை அதிகமாகும்போது, அதில் இருந்து வருகிற சில ரசாயனங்களால் கரு முட்டைகளுக்கான குரோமோசோம்களில் உள்ள இணைப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு, அதனால் கரு முட்டைகளின் தரம் பாதிக்கப்படும்.
சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும். சிலருக்கு இருதய நோய் ஏற்படலாம். மேலும் சில பெண்களுக்கு உடல் பருமன் அதிகமானால் மன அழுத்தம் ஏற்படும். இதுவும் கருமுட்டைகளின் தரம் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.
உடல் எடை குறைவாகும்போது அவர்களுக்குள் ஒரு நேர்மறை சிந்தனை வரும். அவர்களின் தாம்பத்திய உறவில் முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலமாக கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் அதிகமாகும்.