பெண்கள் உலகம்

கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் சில விஷயங்கள்
- துணையின் கடந்த காலம் என்பது அவரிடம் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது.
- நம்பிக்கையை சிதைப்பது உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மனிதர்களாகிய அனைவரும் ஏதேனும் ஒரு விஷயத்தில் குறைபாடுடையவர்கள்தான். ஆனால் துணையின் குறைபாடு பற்றியோ, அவரின் எரிச்சலூட்டும் பழக்கவழக்கங்கள் பற்றியோ மற்றவர்களிடம் பேசுவது சரியாக இருக்காது. அதுபற்றி அவருக்கு தெரியவரும்போது அவமானமாக உணரலாம்.
தன்னுடைய குறையை மற்றவர்களிடம் பகிரங்கப்படுத்தி தன்னை அவமதிப்பதாக கருதலாம். எந்த சந்தர்ப்பத்திலும் துணையின் குறையை சுட்டிக்காட்டி மனம் நோகச்செய்யக்கூடாது. மற்றவர் முன்னிலையில் தன்னை மதிப்புடன் நடத்தவில்லை என்ற உணர்வை அவரிடத்தில் ஏற்படுத்திவிடும். அவரிடம் தென்படும் குறைகளை நிதானமாக புரியவைத்து திருத்துவதற்குத்தான் முயற்சிக்க வேண்டும். மனைவியிடம் குறையே இருந்தாலும் மற்றவர் முன்னிலையில் பாராட்டி பாருங்கள். அவர் தன் தவறை சரி செய்து, எந்த அளவுக்கு மாறி இருக்கிறார் என்பதை அடுத்த முறை நேரடியாகவே தெரிந்து கொள்ளலாம்.
கடந்த காலம்
துணையின் கடந்த காலம் என்பது அவரிடம் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது. அதை உங்களை நம்பி பகிர்ந்து கொண்டிருக்கலாம். அதை பற்றி மற்றவர்களுடன், குடும்பத்துடன் கூட விவாதிப்பது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். துணையை சங்கடப்படுத்தலாம். துணையின் தனிப்பட்ட தகவல்களை, அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மனஸ்தாபத்தை உண்டாக்கி விடும்.
ஆளுமை
துணையின் செயல்பாடுகளை விமர்சிப்பது, கேலி செய்வது அவமரியாதைக்குரிய செயலாகும். அதனை மற்றவர்கள் முன்னிலையில் திரும்ப திரும்ப விமர்சனம் செய்வது அவர் மீது எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கிவிடும். அதனை சரி செய்வது கடினம். உளவியல் ரீதியாக நீண்ட கால உறவுக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்துவிடும். துணையின் ஆளுமை திறனை அவமதிப்பதாகிவிடும். விமர்சனத்தை விட பாராட்டு மற்றும் புரிதலுக்கு முன்னுரிமை கொடுங்கள். துணை மனம் நெகிழ்ந்து போய்விடுவார்.
நிதிநிலை
துணையின் நிதி நிலைமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது அவருடைய தனியுரிமையை மீறுவதாக அமைந்துவிடும். கடன், வருமானம் அல்லது செலவு செய்யும் பழக்கம் எதுவாக இருந்தாலும் அதனை மற்றவர்களிடம் கூற வேண்டியதில்லை. துணை வீண் செலவு செய்வதாக கருதினால் அதுபற்றி அவரிடம் பேசி நிதி நிலையை சீராக கையாள ஊக்குவிக்க வேண்டும்.
அச்சம்
மனைவியின் ஆள் மனதில் அச்சத்தையோ, அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விஷயங்கள் புதைந்திருக்கும். அது ஒருவித பயத்தையும், பாதுகாப்பின்மையையும் உருவாக்கி இருக்கும். நீண்ட நாட்களாக மனதை ஆட்கொண்டிருந்த அந்த விஷயங்களை தன் கணவரிடம் தெரிவித்து மன ஆறுதல் தேடி இருக்கலாம். அவர் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே அந்த விஷயங்களை கூறி இருக்கலாம்.
அவை மற்றவர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ தெரிந்திருக்க வேண்டியதில்லை. தெரியப்படுத்த வேண்டிய அவசியமுமில்லை. அதனை புரிந்து கொள்ளாமல் மற்றவர்களிடம் கூறுவது கணவன் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். ஒரு துணை தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கணவரிடம் வெளிப்படுத்தும்போது உணர்ச்சி ரீதியான பாதுகாப்பையும் எதிர்நோக்குகிறார். கணவர் தனக்கு ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறார். அந்த நம்பிக்கையை சிதைப்பது உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
தகவல் தொடர்பு
எந்தவொரு வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவிற்கும் தகவல் தொடர்பு முதுகெலும்பாகும். நட்பாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி தகவல் தொடர்பு திறன் அவசியமானது. அது புரிதலை வளர்த்தெடுக்கும், தேவையற்ற மோதலை தடுக்கும். துணையிடம் எண்ணங்களையும் உணர்வுகளையும் தெளிவாக வெளிப்படுத்தும்போது தவறான புரிதல்கள் மற்றும் அனுமானங்களை தடுக்கும்.