பீகார் மாநிலம் பாட்னாவில் பாபு என்ற ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் சமயத்தில் நடந்த இச்சம்பவம், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
சான்றிதழ் எண் BRCCO/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்சில் என்றும் இந்த பகுதியில் பாபு வசித்து வருகிறார் என்றும் அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விவகாரம் வைரலான நிலையில் இந்த இருப்பிட சான்றிதழ் இன்று ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், சான்றிதழ் பெற விண்ணப்பித்த கணினி ஊழியர் மற்றும் அவருக்கு சான்றிதழ் அளித்த அதிகாரி ஆகியோருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது என பாட்னா மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், "லஞ்சம் இல்லாமல் பீகாரில் எதுவும் நடக்காது. சன்னி லியோன் மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் பெயரிலும் ஆதார் அட்டைகள் தயாரிக்கப்பட்டன. நாயும் லஞ்சம் கொடுத்திருக்க வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார், EPIC கார்டுகள் நிராகரிக்கப்படும் நிலையில், ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டது, இந்தத் திருத்தப் பணியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
"மக்களின் வாக்குகள் நாய்களுக்கு வழங்கப்படும் போலிருக்கிறது" என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.