சண்டிகர்:
வட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ள அபாயம் உருவாகியுள்ளது. இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளதாக மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
சட்லெஜ், பியாஸ், ராவி நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் மூழ்கின. வீடுகள் சேதமடைந்தன. கனமழை காரணமாக பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி கனமழையால் கடுமையாக பாதிப்பு அடைந்த பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு நிவாரண உதவியாக 5 கோடி ரூபாய் வழங்கினார்.
இதுதொடர்பாக அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சாப், ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் மிகவும் துயரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் அரியானா அரசாங்கமும், மாநில மக்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதியாக நிற்கிறார்கள். முதல் மந்திரியின் நிவாரண நிதியிலிருந்து பஞ்சாப், ஜம்மு காஷ்மீருக்கு தலா 5 கோடி ரூபாய் உதவி அனுப்பப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.