சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்தை பதிவிட்டதற்காக, காங்கிரஸ்காரருக்கு பாஜக தொண்டர்கள் சேலைக்கட்டிவிட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் உல்காஸ்நகரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் பகாரே (வயது 73), சமீபத்தில் பிரதமர் மோடியின் உருமாற்றம் செய்யப்பட்ட படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் எனத் தெரிகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
அத்துடன் பொது இடத்தில் பகாராவை பிடித்து வைத்து, வலுக்கட்டாயமாக சேலை அணிவித்துள்ளனர். மேலும், அதை வீடியோ எடுத்துள்ளனர். அத்துடன் இதுபோன்று பதிவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
ஆனால், பேஸ்புக்கில் உள்ள போஸ்ட் நான் Forward மட்டுமே செய்தேன் என பகாரே தெரிவித்துள்ளார். மேலும், நான் மருத்துவமனையில் இருந்தபோது பாஜக தவைலர் சந்தீப் மாலி போன் செய்தார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது, சந்தீப் மாலி மற்றும் அவருடன் வந்தவர்கள் என்னை பிடித்து, போஸ்ட் குறத்து கேட்டு மிரட்டல் விடுத்தனர். நான் என்ன தவறு செய்தேன் என அவர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேணடும். அவர்களுடைய அட்டூழியங்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.
உள்ளூர் பாஜக தலைவர் நரேந்திர சர்மா கூறுகையில் "பகாரே பிரதமர் மோடியை இழிவுப்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற விசயம் நடைபெற்றால், இதேபோன்று சேலை அணிந்து விடுவோம்" என்றார்.