உள்ளூர் செய்திகள்

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் உலா வரும் முதலை- பொதுமக்கள் அச்சம்
- முதலையை வனத்துறையினர் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆற்று பாலத்தின் அருகே முதலை நடமாட்டம் உள்ளதாக பதாகை வைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் செல்லும் ரோட்டில் அமராவதி ஆற்று பாலம் உள்ளது. இந்த ஆற்றுப்பாலத்தில் முதலை ஒன்று உலா வந்து கொண்டு இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடுமலை அமராவதி அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடும் போது அமராவதி அணையில் இருந்து முதலைகள் தண்ணீர் வழியாக வந்து ஆற்றில் ஆங்காங்கே இருந்து வருகிறது.
இதற்கு முன்பு சீதக்காடு, தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில், வீராச்சிமங்கலம், தாளக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருந்து வந்தது. அப்போது தாராபுரம் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆற்றில் முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை பிடிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் முதலை தப்பி சென்றது.
தற்போது முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே முதலையை வனத்துறையினர் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் முதலை நடமாட்டத்தால் அலங்கியம் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் கீழே இறங்கி குளிக்கவும் துணி துவைக்கவும் வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பக்தர்கள் தாராபுரம் வழியாக பழனிக்கு செல்லும்போது அலங்கியம் அருகில் உள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அமராவதி ஆற்று பாலத்தின் அருகே முதலை நடமாட்டம் உள்ளதாக பதாகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.