திருச்சி:
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் கடந்த 13-ந்தேதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியில் இருந்து தொடங்கியது. இதில் அவருக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கு வெளிப்பட்டது.
திருச்சியை குலுங்கும் அளவுக்கு மக்கள் கடலில் விஜய் நீந்தி சென்றார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவரின் பிரசார வாகனம் மரக்கடை பகுதிக்குச் செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது. சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உத்தேசித்து, திட்டமிட்டே மரக்கடையில் இருந்து பிரசாரத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.
காரணம், ஏற்கனவே எடுத்த பல சர்வே முடிவுகள் திருச்சி கிழக்கு தொகுதி தமிழக வெற்றி கழகத்திற்கு பெரிதும் சாதகமாக இருப்பதை தெரிவித்துள்ளது.
இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த யார் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனால் தாமே களம் இறங்கினால் எளிதில் வெற்றி வாகை சூடலாம் என கருதுகிறார்.
இந்த சட்டமன்ற தொகுதியில் 20 சதவீதம் இஸ்லாமியர் வாக்குகளும், 18 சதவீத கிறிஸ்தவர் வாக்குகளும், 18 சதவீத பிள்ளைமார் வாக்குகளும், 10 சதவீத தாழ்த்தப்பட்டோர் வாக்குகளும், 8சதவீத நாயுடு வாக்குகளும், 6சதவீத செட்டியார் வாக்குகளும், 6 சதவீத கோனார் வாக்குகளும், 5 சதவீத முக்குலத்தோர் வாக்குகளும் மற்றும் ஆசாரி, உடையார் ,வன்னியர், பிராமின், முத்தரையர் , ரெட்டியார், சௌராஷ்டிரா, நாடார், முதலியார், தேவேந்திரர் உள்ளிட்ட இதர வாக்கு வங்கிகள் 27 சதவீதம் இருப்பதும் கணக்கிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு சர்வேக்களில் விஜய்க்கு முதல் தர மாநகரங்களான சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் செல்வாக்கு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
அதேபோன்று வட தமிழகம், கொங்கு பகுதிகளிலும் நல்ல செல்வாக்கு இருப்பதாக அந்த கருத்துக்கணிப்புகள் உறுதிபட தெரிவித்துள்ளன. ஆனால் திருச்சி கிழக்கு தொகுதி தவிர்த்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் அவருக்கு செல்வாக்கு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி கிழக்கு தொகுதியில் தான் நிற்கும் பட்சத்தில் அதன் தாக்கம் குறைவாக இருக்கும் டெல்டா மாவட்டங்களில் வாக்கு வங்கியை உயரச் செய்யும் என விஜய் நம்புகிறார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் திமுகவும் உஷாராகியுள்ளது. தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் டெல்டாவில் ஓட்டை விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த ஆளுங்கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் விஜய் போட்டியிட்டால் அவரை எதிர்கொள்ள நட்சத்திர வேட்பாளரை களமிறக்கவும் தி.மு.க. தயாராகி வருகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடும் தகவல் பிற கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.